(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (20) மாலை நடைபெற்ற சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் பேருவளை ரெட் சன் கழகத்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட சீ ஹோக்ஸ் அணி 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் இறுக்கமான வெற்றியை ஈட்டியது.
இரண்டு அணிகளும் இந்த சுற்றுப் போட்டியில் முதல் தடவையாக விளையாடிய போதிலும் ஆரம்பம் முதல் கடைசிவைர விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் விளையாடின.
எனினும் இடைவேளையின்போது எந்த அணியும் கோல் போட்டிருக்கவில்லை.
இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்தபோது 51ஆவது நிமிடத்தில் ரெட் ஸ்டார் பின்கள வீரர்கள் நால்வருக்கு ஊடாக சீஹோக்ஸ் மத்திய கள வீரர் மொஹமத் குர்ஷித் பந்தை முன்னோக்கி நகர்த்த அதனை நோக்கி ஓடிய மொஹமத் ஹஸ்மீர் கோலின் வலது மூலைக்குள் பந்தை புகுத்தி கோலாக்கினார்.
ரெட் ஸ்டார் பின்களத்தில் ஏற்பட்ட தடுமாற்றமே இந்த கோல் போடப்படுவதற்கு காரணமாக அமைந்தது.
அதன் பின்னர் இரண்டு கழகங்களாலும் மேலதிக கோல் எதனையும் போட முடியவில்லை.
இறுதியில் சீ ஹோக்ஸ் கழகம் 1 - 0 என வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியுடன் முதலாம் கட்டப் போட்டிகள் யாவும் நிறைவடைந்தன.
அப்கன்ட்றி லயன்ஸ், றினோன், சீ ஹோக்ஸ் ஆகிய கழங்கள் தலா ஒரு வெற்றியுடன் தலா 3 புள்ளிகளைப் பெற்றுள்ளன. எனினும் நிகர கோல்கள் வித்தியாச அடிப்படையில் அப்கன்ட்றி லயன்ஸ் முதல் இடத்திலும் றினோன் இரண்டாம் இடத்திலும் சீ ஹோக்ஸ் 3ஆம் இடத்திலும் இருக்கின்றன.
புளூ ஈக்ள்ஸ், நியூ யங்ஸ், கலம்போ எவ்சி, டிபெண்டர்ஸ் ஆகிய கழகங்கள் தலா ஒரு புள்ளியைப் பெற்றுள்ளன.
ரெட் ஸ்டார், ரட்னம், புளூ ஸ்டார் ஆகியன தோல்விகளுடன் கடைசி 3 இடங்களில் இருக்கின்றன.
