(செ.கவிஷனா)
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பஸ் வண்டிகள் குறித்து பொலிஸாருக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கான பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சட்டவிரோத செயலைத் தடுப்பதற்காக நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களையும் அறிவுறுத்தி விசேட தேடுதல் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட சோதனைகளின் போது, மண்ணெண்ணெய் மூலம் இயக்கப்பட்ட 100 பஸ் வண்டிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மற்றும் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகத்திற்குரிய வகையில் பயணித்த மேலும் சில பஸ் வண்டிகளில் இருந்து எரிபொருள் மாதிரிகள் பெறப்பட்டு, அவை மேலதிக பரிசோதனைகளுக்காக இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில் அந்த பஸ்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும், மண்ணெண்ணெய் பயன்படுத்தும் பஸ்களை முற்றுகையிடுவதற்கான விசேட தேடுதல் நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
அத்துடன், எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்கள் எவரேனும் கொள்கலன்களில் தேவையற்ற முறையில் அதிகளவில் மண்ணெண்ணெய் வாங்கிச் செல்கிறார்களா என்பது குறித்து விழிப்புடன் இருக்குமாறும், பஸ் வண்டிகளுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதைத் முற்றாகத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
