(எம்.எப்.எம்.பஸீர், செ. சுபதர்ஷனி)
இரு கரங்கள் மற்றும் கால்கள் கொங்கிரீட் தூணில் கட்டப்பட்ட நிலையில் கின்கங்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 'அல்மேதா' எனப்படும் பாதாள உலகக் குழுவின் முக்கிய துப்பாக்கிதாரியின் கொலை வழக்குக் கோப்பை நீதிமன்றப் பெட்டகத்தில் வைக்குமாறு பத்தேகம நீதிவான் சனத் நாநாயக்கார நேற்று (20) திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 23 ஆம் திகதி கின்கங்கையில் மிதந்த நிலையில் போத்தல பொலிஸாரினால் மீட்கப்பட்ட இந்தச் சடலம், விராஜ் ரஷ்மிக த சொய்சா எனும் 'அல்மேதா' என அவரது குடும்பத்தினராலும் ஒரு பெண்ணினாலும் உயிரிழந்தவரின் உடலில் குத்தப்பட்டிருந்த பச்சை அடையாளத்தை கொண்டு உறுதிப்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், 38580/26 இலக்க வழக்கு நேற்றையதினம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சம்பவம் தொடர்பில் மேலதிக அறிக்கையை ஒன்றை சமர்ப்பித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன மன்றில் விளக்கமளிக்கையில், கொலை செய்யப்பட்ட நபர் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. அத்துடன், தற்போது விளக்கமறியலில் உள்ள விஹங்க என்ற கைதி வழங்கிய உறுதிமொழிப் பத்திரத்தின்படி , காலி குற்றத்தடுப்புப் பிரிவில் வைத்தே அவர் அல்மேதாவை அடையாளம் கண்டு உரையாடியுள்ளதாகத் தெரிவித்தார்.
விசாரணைகளின்படி, இந்த நபர் குருநாகல், மாவத்தகம பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசிப் பதிவுகள் மூலம் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. இக்கொலையின் பின்னணியில் உள்ள முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு வழக்குக் கோப்பை நீதிமன்றப் பெட்டகத்தில் வைக்குமாறு சிஐடியினர் கோரிக்கை விடுத்தனர்.
மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிவான், மரபனு பரிசோதனை அறிக்கையை பெறுவதோடு, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகச் செய்தி வெளியிட்ட தனியார் ஊடக நிறுவனத்திடம் விசாரணை நடத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
'லொக்கு பெட்டி' எனும் பாதாள உலகக் குழுத் தலைவனின் பிரதான துப்பாக்கிதாரியான இவர், மூன்று கொலைகள் மற்றும் 13 கிலோவுக்கும் அதிக போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவராவார். கூரிய ஆயுதம் ஒன்றால் அவரது கழுத்துப்பகுதியில் தாக்கப்பட்டமையே மரணத்துக்கு காரணம் எனப் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணி சேனக பெரேரா முன்னிலையாகியிருந்ததோடு, வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
