(செ.கவிஷனா)
ஸ்ரீ சுதந்திர கட்சியின் 76 ஆவது நிறைவு விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஆரம்பகட்ட கலந்துரையாடல் கட்சியின் தலைவர் சட்டத்தரணி நிமல் சிறிபால டி சில்வா தமையில் கட்சியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அக்கலந்துரையாடலை தொடர்ந்து ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க,
ஸ்ரீ லங்க சுதந்திர கட்சியின் 76 ஆண்டு நிறைவு என்பது உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டுமக்களுக்கும் முக்கியமான ஓர் நிகழ்வாகும். எஸ்.டப்.ஆர்.டி பண்டாரநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி நாட்டிற்கு பெரும் சேவையாற்றிய தலைவர்களை உருவாக்கிய வரலாற்றுப் பெருமைகளை கொண்டது. இன்று சிலர் 76 வருட கால சாபம் என்று நாட்டின் பின்னடைவு குறித்து பேசுகிறார்கள். ஆனால் அதற்கு ஆட்சியில் இருந்த கட்சிகள் மட்டுமன்றி எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தொடர்ச்சியாக எதிராக செயற்பட்டவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.
2018 இல் ஆரம்பிக்கப்படவிருந்த இராஜாங்கனை நீர் விநியோகத் திட்டத்துக்கு அன்று ஜே.வி.பி கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். மக்களை சேர்த்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இன்று அதே திட்டத்தை தாங்கள் செய்த பெரும் சாதனையாக காட்டி அவர்கள் திறந்து வைக்கிறார்கள். வரலாற்றை திரும்பிப் பார்த்தால் நாட்டின் அதிகளவான மின் கம்பங்களை உடைத்தது பாடசாலைகள் நெல் களஞ்சியசாலைகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை அழித்த வரலாறு ஜே.வி.பிக்கு மட்டுமே உண்டு.
அத்துடன் அழிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பயன்படுத்தப்பட்டது இந்த நாட்டு வரிப்பணம் ஆகும். நாங்கள் இந்த ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவது வெறும் வரலாற்றை நினைவு கூர்வதற்காக மட்டுமல்ல, எதிர்காலத்தில் இந்த நாட்டை எங்கு கொண்டு செல்ல வேண்டும், இளைய தலைமுறைக்கும் எதிர்கால சந்ததிக்கும் வழங்க வேண்டிய தொலைநோக்கு பார்வை என்ன என்பதை நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கே ஆகும்.
மேலும், நெல்லுக்கான விலையை விட ஒரு சதம் கூட அதிகமாக வழங்க முடியாது என விவசாய அமைச்சர் மிகத் தெளிவாகக் கூறி வருகின்றார். நாம் அமைச்சருக்குக் கூறுவது என்னவென்றால், எங்களுடன் அல்ல, களத்திற்குச் சென்று விவசாயிகளுடன் இது குறித்துப் பேசுங்கள் என்பதாகும். வரலாற்று ரீதியாக நெல் விலை கணிக்கப்பட்டது விவசாயிக்கு இலவசமாகக் கிடைக்கும் நீர் அல்லது நிலத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு அல்ல, மாறாக அவர்களின் உற்பத்திச் செலவைக் கருத்திற் கொண்டே ஆகும். இன்று ஒரு கிலோ நெல்லுக்கான உற்பத்திச் செலவு 135 ரூபாயை நெருங்கியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். விவசாய அமைச்சரே பாராளுமன்றத்தில் பேசும்போது ஒரு கிலோ நெல்லின் உற்பத்திச் செலவு சுமார் 335 ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின், அதைவிடக் குறைந்த விலையை விவசாயிக்கு வழங்குவது எந்த வகையில் நியாயமாகும்?
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது மக்கள் அந்தச் சுமையைத் தாங்கிக் கொள்கிறார்கள். மின்சாரக் கட்டணம், பாடசாலை வாகனக் கட்டணங்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மற்றும் மரக்கறி விலைகள் உயரும்போதும் மக்கள் அதனைப் பொறுத்துக் கொள்கிறார்கள். மதுபானப் போத்தல் ஒன்றின் விலை அதிகரிக்கும் போது கூட மக்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.
அப்படியிருக்க, அரிசி விலையை மட்டும் செயற்கையாகக் கட்டுப்படுத்தி விவசாயிகளை ஏன் இவ்வாறு வறுமையில் தள்ள வேண்டும்? விவசாயிகளும் தங்களின் உற்பத்திச் செலவை ஈடுசெய்து நியாயமான இலாபத்தைப் பெறக்கூடிய விலை வழங்கப்பட வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் அரசாங்கம் ஆழமாகச் சிந்தித்து விவசாயிகளுக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்றார்.
