உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின்பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள வழக்குடன் தொடர்புடைய பல இடைக்கால மனுக்களை எதிர்வரும் ஆகஸ்ட் 4 மற்றும் 6 ஆகிய திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தான் கைது செய்யப்படுவதற்கும் தடுத்து வைக்கப்படுவதற்கும் எதிராக சலே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், பெங்கமுவே நாலக தேரர் மற்றும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட எட்டுத் தரப்பினர், இது தொடர்பில் சமர்ப்பணங்களை மேற்கொள்வதற்கு அனுமதி கோரி இடைக்கால மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த மனுக்கல் தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தனவின் சமர்ப்பணங்கள் நிறைவடைந்த பின்னர், இந்த இடைக்கால கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய தெரிவித்தார்.
இடைக்கால மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் இணக்கப்பாட்டுடன், இந்த மனுக்களை எதிர்வரும் ஆகஸ்ட் 4 மற்றும் 6 ஆகிய திகதிகளில் விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
