முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி மக்கள் முன்னெடுத்து வரும் இரண்டாவது கட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை (18) 25ஆவது நாளை எட்டியுள்ளது.
இன்றைய போராட்டத்தில் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் இணைந்து கவனயீர்ப்பில் பங்கேற்றார்.
தமது பூர்வீக நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள கேப்பாப்பிலவு மக்கள், பல ஆண்டுகளாக அமைதியான ஜனநாயக வழிமுறைகளில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இருப்பினும், தங்களது சொந்தக் காணிகளில் மீளக் குடியேறவும், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாத நிலை தொடர்வதாக தெரிவிக்கின்றனர்.
கேப்பாப்பிலவு பூர்வீகக் காணிகள் தொடர்பான நீண்டகால பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரமான தீர்வு எட்டப்படாத நிலையில், தங்களது நில உரிமைகளை மீண்டும் வலியுறுத்தும் நோக்கில் மக்கள் இரண்டாவது கட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கேப்பாப்பிலவில் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காணிகளை உடனடியாக உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியே இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 25ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
