(க.சிவலிங்கமூர்த்தி)
போரின் போது இராணுவத்தினரால் பறிக்கப்பட்ட மக்களின் காணி நிலங்களை உடனடியாக மீண்டும் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, சம உரிமை இயக்கம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் பேரவை ஆகியன கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் கேப்பாபிலவு, பலாலி, காஞ்சி ஆகிய பகுதி மக்களுடன் யாழ்ப்பாணம் நகரில் உள்ள செந்தே செல்வா மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (17) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தன.
இந்த கலந்துரையாடலின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கும் போதே சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளரும், முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான இந்திரானந்த டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாம் சம உரிமை இயக்கம் என்ற ரீதியில் கேப்பாபிலவு, பலாலி, காஞ்சி ஆகிய கிராமப் பகுதி மக்களின் காணி நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டு தற்போது 36 வருடங்கள் கடந்துள்ளன என்பதை நாம் அறிவோம்.
போர் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு அந்த நிலங்களில் மீளக் குடியேறக் காத்திருக்கும் மக்களுக்கு அவற்றை மீண்டும் வழங்குவதற்கு இன்னும் முடியாமல் போயுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு சூழ்நிலையாகும்.
ஏனெனில் இன்றைய நாளிலும் அந்த மக்கள் தங்களின் காணி நிலங்களைக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். பல்வேறு அரசியல்வாதிகள் இங்கு வந்து இந்த மக்களுக்கு அவர்களின் நிலங்களை மீட்டுத் தருவதாகப் வாக்குறுதிகளை வழங்கிச் சென்றனர். ஆனால் அந்த வாக்குறுதிகள் அனைத்தும் தேர்தல் வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த அரசாங்கம் அவ்வாறானது அல்ல என நினைத்துத்தான் யாழ்ப்பாணத்து தமிழ் மக்கள் இம்முறை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு தங்களின் வாக்குகளைப் பயன்படுத்தினர். ஆனால் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நெருங்கிவிட்டன. எனினும், வடக்கில் வலுக்கட்டாயமாகப் பிடிபட்டுள்ள காணி நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு இன்னும் எந்தவித ஆயத்தங்களும் இல்லை.
யாழ்ப்பாணத்து மக்கள் இன்னமும் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய நாளிலும் சில தேவாலயங்களும் கோயில்களும் இராணுவ முகாம்களுக்கு உள்ளேயே காணப்படுகின்றன. அவற்றிற்குத் தங்களின் மத வழிபாடுகளை மேற்கொள்ளச் செல்வதானால் அடையாள அட்டையை கட்டாயமாகக் காண்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சில இராணுவ முகாம்களுக்குள் ஏக்கர் கணக்கில் தென்னந்தோட்டங்கள் பராமரிக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்து ஏழை விவசாயி கடைகளுக்குத் தேங்காயொன்றை 100 ரூபாவுக்கு விற்பனை செய்யும்போது, இராணுவத்தினர் தேங்காய்களை 50 ரூபாவுக்கு விற்பனை செய்கிறார்கள். விவசாயியின் மகன் என்று கூறிக்கொண்ட அநுர திசாநாயக்கவிடம் நாம் கேட்கின்றோம், அப்படியென்றால் இந்த மக்கள் எவ்வாறு வாழ்வது?
தெற்கில் இவ்வாறு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கைப்பற்றி இராணுவ முகாம்கள் அமைக்கப்படவில்லை என்பதை நாம் அறிவோம். பொதுவாக இராணுவ முகாம்கள் மனித குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்படுவதில்லை. அதற்குக் காரணம், அதனால் மக்களுக்கு, குறிப்பாகச் சிறுவர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதனாலாகும். ஆனால் தசாப்த காலமாக யாழ்ப்பாணத்து மக்கள் இராணுவ முகாம்களுக்குள்ளேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வளவு காலமும் தெற்கில் உள்ள சிங்கள சமூகத்துகு இந்தப் பிரச்சினை புரியவில்லை. தங்களின் நிலங்களைக் கோரி நீண்ட வருடங்களாகத் தமிழ் மக்கள் முன்னெடுத்து வரும் இந்த நியாயமான போராட்டத்துக்கு இப்பொழுதாவது தெற்கு சமூகம் தனது ஆதரவை வழங்க வேண்டும். எனவே சம உரிமை இயக்கம் என்ற ரீதியில் இந்தச் போராட்டங்களுக்கு எங்களது முழுமையான ஆதரவை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை மீண்டும் வென்றெடுக்கும் போராட்டத்தை மையப்படுத்தி ஒன்றிணையுமாறு இந்த நாட்டில் போராடும் அனைத்துச் சக்திகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். அதேபோன்று வட பகுதி மக்களிடமிருந்தும் பறிக்கப்பட்ட காணி நிலங்களை உடனடியாக அந்த மக்களுக்கே வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் அரசாங்கத்திடமும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
