(செ.சுபதர்ஷனி)
நாட்டின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் முப்படையினர், பொலிஸார் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகிய தரப்பினர் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் 'முழு நாடும் ஒன்றாக' எனும் விசேட செயற்திட்டத்தின் கீழ், கடந்த 8 மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 230,248 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன தெரிவித்தார்.
'முழு நாடும் ஒன்றாக' செயற்திட்டத்தின் பிரதான அலுவலக ஊடக மையத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இத்திட்டத்தின் கீழ் பொலிஸார் உள்ளிட்ட முப்படையினரால் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மிகவும் செயற்திறனான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் கடந்த 8 மாத காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 230,248 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 2248 கிலோ கிராம் ஹெரோயின், 2608 கிலோ கிராம் ஐஸ், 7481 கிலோ கிராம் கஞ்சா, 289 கிலோ கிராம் கொக்கைன் ஆகிய போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் விமான நிலையத்தின் மூலம் நாட்டிற்குள் கொண்டுவரப்பட இருந்த 636 கிலோ கிராம் குஷ், 349 கிலோ கிராம் ஹஷீஸ் போதைப்பொருள் உள்ளடங்கலாகப் பெருமளவான போதைப்பொருள் சுங்கப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு 35 இலட்சத்துக்கும் அதிக எண்ணிக்கையிலான போதை மாத்திரைகளும் இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.
குறிப்பாகப் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட ஏனைய புகையிலை தயாரிப்புகளின் விற்பனை செய்து வருகின்றமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்ட 1.5 பில்லியன் சொத்துகள் தொடர்பிலும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு 3214 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 2263 பேர் மறுவாழ்வு மத்திய நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு இந்நடவடிக்கையின் போது கைதானவர்களில் 8459 பேர் 21 வயதுக்குக் கீழ்பட்ட சிறுவர்கள் ஆவர். அவர்களில் 161 பேர் பெண் பிள்ளைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருந்த சிறுவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சில சர்வதேச பாடசாலைகளின் அருகாமையில் போதைப்பொருள் வர்த்தகம் இடம்பெற்று வருவதோடு, பாடசாலை மாணவர்களும் போதைப்பொருள் பயன்படுத்தி வருகின்றமையும் தெரியவந்துள்ளது.
ஆகையால் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமையப் பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் சமூகப் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுத் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவில் சிறுவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் இதன் பயன்பாடு சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்றார்.
