முத்துராஜவெல பகுதியில் மேலதிகமாக 7 எரிபொருள் களஞ்சியத் தொட்டிகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம் மற்றும் களஞ்சிடல் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கம் செய்யும் திட்டத்தின் கீழ் இந்த புதிய தொட்டிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இந்த 7 தொட்டிகளில் 4 தொட்டிகள் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளை களஞ்சியப்படுத்துவதற்காக மாத்திரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முத்துராஜவெல பகுதியிலிருந்து கட்டுநாயக்க வரை எரிபொருளைக் கொண்டு செல்வதற்காக 21 கிலோமீட்டர் நீளமான புதிய குழாய் வழித் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கான அறிவிப்பையும் ஜனக ராஜகருண வெளியிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, கொழும்பு துறைமுக வளாகத்திலிருந்து கொலன்னாவை வரை மற்றுமொரு புதிய குழாய் வழித் தொகுதியை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
