(என்.வீ.ஏ.)
விளையாட்டுத்துறை தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவினால் ஜெவ்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான போதிலும், லங்கா பிரீமியர் லீக் 2026 திட்டமிட்டபடி இன்று மாலை கொழும்பு, எஸ்எஸ்சி மைதானத்தில் ஆரம்பமாகும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விடயம் தொடர்பாக எழும் விசாரணைகள் தொடர்பாக ஏதேனும் உதவி கோரப்பட்டால், சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு லங்கா பிறீமியர் லீக் குழுவினருடன் இணைந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.
லங்கா பிறீமியர் லீக் 2026ஐ நடத்தும் பொறுப்புள்ள நிருவாக அமைப்பாக, போட்டியின் நேர்மைத்துவத்தைப் பாதுகாப்பதில் தனது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீண்டும் வலியுறுத்தியது. அத்துடன் லீக்குடன் தொடர்புடைய எந்தவொரு பங்குதாரராலும் செய்யப்படும் ஊழல், முறைகேடு அல்லது முறைகேடுகளைத் சகித்துக்கொள்ளாது எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
லங்கா பிறீமியர் லீக் போட்டியானது மிக உயர்ந்த நெறிமுறை மற்றும் நேர்மைத் தரங்களின் கீழ் நடத்தப்படுவதை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் எடுத்துள்ளது. லீக்கின் ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்த அதன் ஊழல் எதிர்ப்புப் பிரிவு, சிறப்பு புலனாய்வுப் பிரிவுடன் (SIU) நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.
மேலும், நியாயமான, வெளிப்படையான மற்றும் ஊழலற்ற சூழலை உறுதி செய்வதற்காக, போட்டி முழுவதும் சிறப்பு ஆதரவையும் கற்றலையும் வழங்குவதற்கு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு சுதந்திரமான விளையாட்டுத்துறை ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது.
ஊழல் மற்றும் நெறிமுறையற்ற நடைமுறைகளுக்கு எதிரான தனது சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வலியுறுத்தியதுடன், எல்பிஎல் 2026 அத்தியாயம் மிகுந்த கண்ணியத்துடனும் நேர்மையுடனும் நடத்தப்படும் என்று ரசிகர்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் உறுதியளிக்கிறது.
