(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (17) மாலை நடைபெற்ற சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் நடப்பு சம்பியன் களுத்துறை புளூ ஸ்டார் கழகத்தை வெளுத்துக்கட்டிய நாவலப்பிட்டி அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் 9 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மிக இலகுவாக வெற்றி பெற்றது.
நான்கு வெளிநாட்டவர்களுடனும் ஐந்து சமகால தேசிய வீரர்களுடனும் விளையாடிய அப்கன்ட்டி லயன்ஸ் கழகம் போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது.
போட்டியின் 12ஆவது நிமிடத்தில் புளூ ஸ்டார் கழகத்தின் வெளிநாட்டு வீரர் ஜெறி ஒம்பேப் சொந்த கோல் ஒன்றைப் போட்டு எதிரணியான அப்கன்ட்றி லயன்ஸ் அணியை முன்னிலை அடையச் செய்தார்.
34ஆவது நிமிடத்திலிருந்து 50ஆவது நிமிடம் வரை 16 நிமிட இடைவெளியில் அப்கன்ட்றி லயன்ஸ் 5 கோல்களை போட்டு புளூ ஸ்டார் அணியை திக்குமுக்காட வைத்தது.
இதில் 5 நிமிட இடைவெளியில் 3 கோல்களும் 2 நிமிட இடைவெளியில் 2 கோல்களும் அடங்கும்.
இதனிடையே புளூ ஸ்டார் கழகமும் ஒரு கோலைப் புகுத்தி ஆறுதல் அடைந்தது.
இடைவேளையின்போது அப்கன்ட்றி லயன்ஸ் 6 - 1 என முன்னிலையில் இருந்தது.
அப்கன்ட்றி லயன்ஸ் சார்பாக வெளிநாட்டு வீரர் ஜெறி ஒம்பேப் (12 நி. சொந்த கோல்), மொஹம்த் இஷான் (34 நி., 38 நி.), மொஹமத் ஆக்கிப் 39 நி.,50 நி.), வெளிநாட்டு வீரர்களான பெஞ்சமின் யோர்க் (45+1 நி., 45+3 நி., 90 நி.), அப்துல் ரஹ்மான் யஹியா (80 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டனர்.
புளூ ஸ்டார் சார்பாக மொஹமத் ஷிபான் (41 நி.) ஒரு கோலை போட்டார்.
