இலங்கையில் 2030ஆம் ஆண்டுக்குள் தயாரான தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராம் அளவிற்கும், தேயிலை ஏற்றுமதி வருவாயை அமெரிக்க டொலர் 2.5 பில்லியன் அளவிற்கும் உயர்த்தும் தேசிய இலக்கை அடைவதற்காக, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் “Ceylon Tea Village” (சிலோன் டீ வில்லேஜ்) எனப்படும் 500 தேயிலை கிராமங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று (15) நுவரெலியாவில் ஆரம்பிக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹல்கொல்ல கிராமத்தில், ஹப்புகஸ்தலாவ நீர்த்தேக்கத்துக்கு முன்பாக அமைச்சர் சமந்த வித்யரத்ன தலைமையில் தேசிய ரீதியில் இத்திட்ட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த வேலைத்திட்டம் இலங்கையின் சிறு தேயிலை தோட்டத்துறையை நவீனமயப்படுத்துதல், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் தேயிலைத் தொழில்துறையின் நிலைத்தன்மையான வளர்ச்சியை வேகப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் செயற்படுத்தப்படுகிறது.
இதன்படி, இன்றைய தினம் (16) இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள 144 தேயிலை ஆராய்ச்சி நிலையங்களை உள்ளடக்கும் வகையில் 144 தேயிலை கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மஞ்சுல சுரவீர ஆராச்சி, கிருஷ்ணன் கலைச்செல்வி, அனுஷா திலகரத்ன உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் நிமல் உடுகம்பொல, இலங்கை தேயிலை சபைத் தலைவர் ராஜ்பால் ஒபேசேகர, இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் பேராசிரியர் கோஸ்டா, அரச தோட்டக் கழகத் தலைவர் சிசிர ரணதுங்க, தென்னை வளர்ச்சி சபைத் தலைவர் டாக்டர் சுனிமல், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைத் தலைவர் அங்கி உள்ளிட்டோர் மற்றும் அமைச்சுடன் தொடர்புடைய அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
