(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆறாவது லங்கா பிறீமியர் லீக் (LPL) அத்தியாயம் கிரிக்கெட், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் மற்றும் தேசிய பெருமை ஆகியவற்றை ஒன்றிணைத்து, ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில், கொழும்பு SSC மைதானத்தில் வெள்ளிக்கிழமை (17) மாலை வெகு விமரிசையாக தொடங்கவுள்ளது.
எல்பிஎல் வரலாற்றிலேயே மிகவும் மறக்க முடியாத ஒரு ஆரம்ப விழாவாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், உப சம்பியன் கோல் கெலன்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியும் நாளை இரவு நடைபெறும்.
இசை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள், உத்தியோகபூர்வ நிகழ்வுகள், அணிகள் அறிமுகம், வெற்றிக் கிண்ணம் காட்சிப்படுத்தல் மற்றும் எல்பிஎல் வரலாற்றில் முதன்முறையாக 500 ட்ரோன்களின் வான் ஒளிக்காட்சி என கிரிக்கெட் ரசிகர்கள் எவரும் தவறவிடக் கூடாத, மறக்க முடியாத ஒரு கொண்டாட்டமாக இந்த ஆரம்ப விழா அமையவுள்ளது.
இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர்களான யோஹானி, சங்கா தினேத், சென்டிகிரேட்ஸ் குழுவினர் ஆகியோர் தங்களது இசையால் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.
ஆறாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தை போட்டி பணிப்பாளர் சமன்த தொடங்கொட சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பார். இதனைத் தொடர்ந்து, கண்கவர் வெற்றிக் கிண்ணம் காட்சிப் படுத்தப்படும்.
இந்த வருட லங்கா பிறீமியர் லீக்கில் பங்குபற்றும் ஐந்து அணிகளையும் ரசிகர்கள் வரவேற்கும் வகையில் அணிகளின் அறிமுக நிகழ்வும் இடம்பெறும். இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், போட்டி தொடர்பான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்யும்.
500 ட்ரோன்கள் காட்சி
ஆரம்ப விழாவை மேலும் மெருகூட்டும் வகையில், 500 ட்ரோன்களைக் கொண்டு வான் பரப்பில் எல்பிஎல் சின்னம், கிரிக்கெட் காட்சிகள், தேசிய பெருமை மற்றும் அணிகளின் சின்னங்கள் ஒளிரச் செய்யப்படும்.
இந்த ஆரம்ப விழா குறித்து IPG நிறுவனத்தின் தலைவரும் ஸ்தாபகருமான அனில் மோகன் கருத்து தெரிவிக்கையில்,
'எல்.பி.எல் 2026 என்பது வெறும் கிரிக்கெட் தொடர் மட்டுமல்ல. இது ரசிகர்களுக்கு ஒரு முழுமையான, பரபரப்பான அனுபவத்தைக் கொடுக்கும். ஜூலை 17 அன்று நடைபெறும் தொடக்க விழா, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைந்து ரசிக்கும் வகையில் அமையும். இந்தத் தொடக்க விழா உற்சாகம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட்டுக்கான அடித்தளமாக அமையும் என நாங்கள் கருதுகிறோம்' என்றார்.
லங்கா பிரீமியர் லீக் போட்டி பணிப்பாளர் சமன்த தொடங்வெல கருத்து தெரிவிக்கையில்,
'போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு வீரர்கள், அணிகள் மற்றும் ரசிகர்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஒவ்வொரு எல்பிஎல் பருவகாலத்திலும் ஆரம்ப விழா ஒரு முக்கியமான தருணமாக அமையும். இந்த வருடம் தொடக்க விழா, லீக்கின் பெருமையைக் கொண்டாடும் வகையிலும், இந்தத் தொடருக்கு ஒரு பிரம்மாண்டமான தொடக்கத்தைக் கொடுக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறக்க முடியாத நிகழ்வாக அமையவுள்ள எல்.பி.எல் 2026 தொடக்க விழாவை நேரடியாகக் கண்டுகளிக்க ரசிகர்களை கொழும்பு SSC மைதானத்திற்கு வருகை தருமாறு அழைக்கிறோம்' என்றார்.
ஆரம்ப விழாவும் முதல் போட்டியும் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறுவதால், கிரிக்கெட்டின் உற்சாகம் உயர்தரத்தில் இருக்கும் என நம்பப்படுகிறது.
லங்கா பிரீமியர் லீக் 2026 தொடரானது ஜூலை 17ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 8ஆம் திகதி இறுதிப் போட்டியுடன் நிறைவுபெறும்.
அணிகள் மற்றும் வீரர்கள்
கலம்போ கெப்ஸ்: குசல் மெண்டிஸ் (தலைவர்), கமிந்து மெண்டிஸ், பினுர பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, மிலன் ரத்நாயக்க, ஜனித் லியனகே, ஜெவ்றி வெண்டசே, தானுக்க தாபரே, மொவின் சுபசிங்க, மல்ஷ தருபதி, சண்முகநாதன் ஷாருஜன், வனுஜ சஹான், அன்தனி பிரகாசம், ஜேம்ஸ் நீஷாம், பென் மெக்டமட், முஜீப் உர் ரஹ்மான், ஷாநவாஸ் தஹானி, ரூபின் ஹேர்மான், ஹசன் மஹ்மூத், குஷல் பர்ட்டெல்.
தம்புள்ள சிக்சர்ஸ்: தினேஷ் சந்திமால் (தலைவர்), துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, நிரோஷன் திக்வெல்ல, பவன் ரத்நாயக்க, அக்கில தனஞ்சய, தனஞ்சய லக்ஷான், ரமேஷ் மெண்டிஸ், சச்சித்த ஜயதிலக்க, விஷ்வ குமார, கயன வீரசிங்க, ஷாஹிப்ஸதா பர்ஹான், ரீஸா ஹென்றிக்ஸ், பஸால்ஹக் பாறூக்கி, மொஹம்மத் வசிம் ஜூனியர், குல்பாதின் நய்ப், மார்க்ஸ் அக்கமன், ஷட்லி வென் ஷோக்வய்க்.
கோல் கெலன்ட்ஸ்: தசுன் ஷானக்க (தலைவர்), ஏஷான் மாலிங்க, சரித் அசலன்க, ப்ரமோத் மதுஷான், லசித் குரூஸ்புள்ளே, விஜயகாந்த் வியாஸ்காந்த், சஹான் ஆராச்சிகே, சாமிக்க கருணாரட்ன, தரிந்த ரத்நாயக்க, தினுர கலுபஹன, யூரி கொத்திகொட, கசுன் ராஜித்த, சச்சிந்து கொலம்பகே, கிறிஸ் லின், நூருள் ஹசன் சொஹான், மொஹம்மத் நவாஸ், ஆக்கிவ் ஜாவேட், சாம் ஹாப்பர், மெஹிதி மிராஸ், விரந்தீப் சிங்.
ஜெவ்னா கிங்ஸ்: பானுக்க ராஜபக்ஷ (தலைவர்), துனித் வெல்லாலகே, அவிஷ்க பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க, காமில் மிஷார, ட்ரவீன் மெத்யூஸ், மொஹமத் ஷிராஸ், சமிந்து விக்ரமசிங்க, நுவனிது பெர்னாண்டோ, சினேத் ஜயவர்தன, ப்ரவீன் மனீஷ, நிஷான் மதுஷ்க, ஷக்கிப் அல் ஹசன், தஸ்கின் அஹ்மத், டேவிட் வைஸ், இப்ராஹிம் ஸத்ரான், பியூஷ் சௌலா, லிஸாட் வில்லியமஸ், ஸஹூர் கான்.
கண்டி றோயல்ஸ்: ஏஞ்சலோ மெத்யூஸ் (தலைவர்), வனிந்து ஹசரங்க, நுவன் துஷார, குசல் பெரேரா, அசித்த பெர்னாண்டோ, குரக்க சன்கேத், விஷேன் ஹலம்பகே, முடித்த லக்ஷான், லஹிரு உதார, சஹான் மிஹிர, பவன் தேவா டி சில்வா, துஷான் ஹேமன்த, இசித்த விஜேசுந்தர, மொயீன் அலி, விஜய் ஷன்கர், சிதிக்குல்லா அத்தல், ஷஹீன் ஷா அப்றிடி, டேல் பிலிப்ஸ், ஸஹிர் கான், பிரெண்டன் மெக்கலம்.
போட்டி அட்டவணை
