(க.சிவலிங்கமூர்த்தி)
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மிகவும் எளிமையாக இருந்தபோதிலும், அவற்றை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அரசாங்கம் அடக்குமுறை போக்குடன் விவசாயிகளை நசுக்கி வருவதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை இன்றும் ஒரு விவசாய நாடாகும். இந்த நாட்டின் நாகரிகத்தின் வெளிப்பாடே உணவு வளம் நிறைந்த நாடு என்பதாகும். இதன் மூலம் எமது விவசாயிகளும் நாட்டின் பண்பாடும் நாகரிகமும் எவ்வளவு ஆழமாக ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து தொடர்ச்சியாக இருந்து வருகின்றன என்பது வெளிப்படுகின்றது.
இன்றும் இந்த நாட்டின் முழுமையான உணவுப் பாதுகாப்புக்குத் தேவையான பிரதான உணவின் அடிப்படைச் தேவையை வழங்குவது எமது நாட்டின் விவசாயிகளே. நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மட்டுமன்றி, அவர்களைச் சுற்றியுள்ள ஏனைய விவசாயிகளும், குறிப்பாக காய்கறிகள் மற்றும் பிற தானிய வகைகளை உற்பத்தி செய்கின்ற விவசாயிகளும் இன்று மிகுந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய அமைப்புகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். அவர்கள் எதிர்கொண்டு வரும் துயரமான நிலைமையை வெளிப்படுத்துவதற்குக் கூட முடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் கேள்வி மிகவும் எளிமையானது. தங்களுடைய பிரச்சினையை தெளிவாக முன்வைத்துள்ள நிலையில், அதற்கான பதிலும் தீர்வும் எளிமையாக இருக்கின்ற போது, ஏன் இந்த அரசாங்கம் இவ்வாறு அடக்குமுறை போக்குடன் விவசாயிகளை துன்புறுத்துகிறது என்பதே அவர்களின் கேள்வியாக உள்ளது.
இன்று விவசாயி அனைத்து வழிகளிலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். விவசாயத்துக்குத் தேவையான உற்பத்தி உள்ளீடுகளின் விலை வானளாவிய அளவுக்கு அதிகரித்துள்ளது. அவற்றை வாங்குவதற்கே அவர்களால் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிக செலவுகளைச் செய்து, தங்களுடைய நேர்மையான உழைப்பை செலுத்தி உற்பத்தி செய்யும் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு சென்றாலும், அதற்காக செலவிட்ட தொகைக்கும் அவர்களின் உழைப்புக்கும் ஏற்ற நியாயமான விலை கிடைப்பதில்லை.
இந்த எளிமையான உண்மையைக் கூட புரிந்துகொள்ள முடியாத அரசாங்கம் ஒன்று நாட்டில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. விவசாயிகளுடன் இணைந்து போராடிய வரலாற்றைக் கொண்டவர்களே இன்று ஆட்சியில் உள்ளனர். ஆனால் அவர்கள் இன்று அதே விவசாயிகளின் துயரங்களை புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலைமை மிகவும் வேதனையளிக்கின்றது. விவசாயத்தை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கை இன்று பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாய உற்பத்தி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக அரிசி உள்ளிட்ட அடிப்படை உணவுப் பொருட்களின் கிடைப்பிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் மட்டுமன்றி அனைத்து நுகர்வோரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
விவசாயத்தை பாதுகாக்கவேண்டிய அரசாங்கம் அதற்கு மாறாக இறக்குமதியை மையப்படுத்திய குறுகிய நோக்குடைய கொள்கைகளை முன்னெடுத்து வருகின்றது. காய்கறிகள் மற்றும் உணவு சார்ந்த பொருட்களின் இறக்குமதி தொடர்பிலும் தவறான கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. விவசாயிகளின் உணர்வுகளுக்கும் அவர்களின் துயரங்களுக்கும் அரசாங்கம் எந்த முக்கியத்துவமும் வழங்கவில்லை.
எனவே இந்த நாட்டின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து விவசாயிகளுக்காக ஒரே குரலில் குரல் எழுப்ப வேண்டும். அரசாங்கத்துக்கு தெளிவாக கேட்கும் வகையில் வலுவான மக்கள் குரல் உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில் எமது நாட்டின் விவசாயம் முற்றாக வீழ்ச்சியடைந்து, எதிர்காலத்தில் எமது உணவுப் பாதுகாப்பை முழுமையாக இறக்குமதியை நம்பி உறுதிப்படுத்த வேண்டிய ஆபத்தான நிலை ஏற்படும் என்றார்.
