அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான தொலைதூர அந்தாட்டிக் தீவுகளில், கொடூரமான மாற்றுருவப் பறவைக் காய்ச்சல் நோய் பரவியதனால், உலகிலேயே மிக அரிதான 13,000-க்கும் மேற்பட்ட தெற்கு கடல் யானை குட்டிகள் கொத்துக் கொத்தாக மடிந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் புதிய ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
அவுஸ்திரேலியாவின் தென்மேற்கே சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள 'ஹேர்ட் மற்றும் மெக்டொனால்ட் தீவுகள்', ஒரு மில்லியனுக்கும் அதிகமான கடல் பறவைகள் மற்றும் கடல் நாய் இனங்களின் இனப்பெருக்கக் வாழிடமாகத் திகழ்கின்றன.
அறிவியல் இதழான ‘பயோஆர்கைவ்’ இல் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய ஆராய்ச்சி அறிக்கையில்,
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், இந்தத் தீவுகளில் பரவத் தொடங்கிய H5N1 ரக பறவைக் காய்ச்சல் வைரஸினால், ஹேர்ட் தீவில் இருந்த 17,364 கடல் யானைக் குட்டிகளில் சுமார் 13,359 குட்டிகள் (75% க்கும் மேல்) பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
தீவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மிகக் கொடூரமாக 97 சதவீத குட்டிகள் மடிந்துள்ளன. இறுதி ஆய்வுகள் நடத்தப்பட்ட போதிலும் குட்டிகள் தொடர்ந்து இறந்து கொண்டிருந்ததால், ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடல் யானைகளுக்கு அடுத்தபடியாக கிங் (King) மற்றும் ஜென்டூ (Gentoo) வகை பென்குயின்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல நூறு முதிர்ந்த கிங் பென்குயின்களும் இறந்துள்ளன.
மனிதர்கள் எளிதில் சென்றடைய முடியாத இந்தத் தீவுகளில், விஞ்ஞானிகள் ட்ரோன் கணக்கெடுப்புகள் மற்றும் தரைவழிப் பயணங்கள் மூலம் ஒன்பது வகையான உயிரினங்களிடமிருந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.
அவற்றில் தெற்கு கடல் யானை (Southern elephant seal), கிங் பென்குயின் (King penguin), ஜென்டூ பென்குயின் (Gentoo penguin), அந்தாட்டிக் ஃபர் கடல் நீர் நாய் (Antarctic fur seal) மற்றும் சவுத் ஜோர்ஜியா டைவிங் பெட்ரல் பறவை (South Georgia diving petrel) ஆகிய 6 முக்கிய உயிரினங்களுக்கு H5N1 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில், இப்பகுதியில் உள்ள அல்பட்ரோஸ் பறவையினங்கள் அல்லது அங்குள்ள பிற உள்ளூர் உயிரினங்கள் மத்தியில் எவ்வித அசாதாரண மரணங்களும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
"அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டுப் பிராந்தியம் ஒன்றில் H5 பறவைக் காய்ச்சல் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த வைரஸ் சுமார் 1,800 கி.மீ தொலைவில் உள்ள பிரான்சுக்குச் சொந்தமான குரோசெட் தீவுகளிலிருந்து இடம்பெயர்ந்த பறவைகள் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கு பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது." என வனவிலங்கு உயிரியலாளர் வைத்தியர் ஜூலி மெக்கின்னெஸ் தெரிவித்துள்ளார்.
உலகளவில் பறவைகள் மற்றும் பாலூட்டிகள் மத்தியில் இந்த H5N1 வைரஸ் பேரழிவை ஏற்படுத்தி வரும் போதிலும், அவுஸ்திரேலியாவின் பிரதான கண்டப் பகுதியில் இதுவரை ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழ்நிலையில், கடல் யானைகளின் இந்த பெருமளவிலான மரணங்கள் "மிகவும் கவலையளிப்பதாக" தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய சுற்றாடல் துறை அமைச்சர் முர்ரே வாட், இந்த ஆபத்தான வைரஸ் அவுஸ்திரேலிய பிரதான நிலப்பரப்பிற்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகளை நாம் யதார்த்தமாக உணர்ந்து, அதற்கு எதிராக இப்போதிருந்தே தீவிரமாகத் திட்டமிட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
