(எம்.மனோசித்ரா)
முப்படைகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட அனைத்து அரச புலனாய்வுப் பிரிவுகளும் அரசாங்கத்திற்கே சொந்தமானவை என்பதால், தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய இரகசியத் தகவல்களை எவரும் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க முடியாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்கால பயங்கரவாதச் செயல்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மடிக்கணினி உள்ளிட்ட உபகரணங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறுபவர்கள், உடனடியாக அத்தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
புலனாய்வுச் சேவை என்பது அரசாங்கத்துக்கு சொந்தமானது. அது முப்படைகளின் புலனாய்வுப் பிரிவாக இருந்தாலும், பொலிஸ் புலனாய்வுப் பிரிவாக இருந்தாலும் அல்லது அரச புலனாய்வுச் சேவையாக இருந்தாலும், அவை அனைத்தும் அரசாங்கத்துக்கே சொந்தமானவை. எனவே, அந்தத் தகவல்கள் அரசாங்கத்துக்கு முக்கியமானவை மற்றும் மக்களின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட வேண்டியவை.
யாராவது ஒருவர் தன்னிடம் புலனாய்வுத் தகவல்கள் இருப்பதாகவும், எதிர்காலத்தில் ஒரு பயங்கரவாதச் செயல் நடக்கப் போகிறது, ஆனால் அந்தத் தகவல்களை நாங்கள் அரசாங்கத்திற்கு வழங்க மாட்டோம் என்றும் கூறினால், அது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நிச்சயமாக விசாரணைகளை மேற்கொள்ளும்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்கூட, அடுத்த சில நாட்களில் நடக்கவிருக்கும் ஒரு உண்மையான பயங்கரவாதச் செயலுக்குத் தொடர்புடைய தகவல்கள், மடிக்கணனி மற்றும் ஏனைய உபகரணங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறுகின்றார். அது குறித்து ஏதேனும் முறைப்பாடு கிடைத்தால் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுக்கும்.
அத்தகைய தகவல்களை எவரும் தங்களின் வசம் தனிப்பட்ட ரீதியில் வைத்திருக்க முடியாது. அவை அரசாங்கத்துக்குரிய இரகசியத் தகவல்கள். அந்தத் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து தீர்மானங்களை எடுப்பது அரசாங்கம் தான். எனவே, எவரும் தனிப்பட்ட முறையில் அத்தகைய தகவல்களை வைத்திருக்க முடியாது, தயவுசெய்து அவற்றை ஒப்படையுங்கள், இல்லையெனில் அதற்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
