(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட்-19 காரணமாக தகனம் செய்யப்பட்ட நபர்களின் பெயர் விபரங்களை பிரதேச செயலகப் பிரிவின் ஊடாக பெற்றுத்தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபேரத்ன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
கொவிட்-19 காரணமாக இறந்து தகனம் செய்யப்பட்ட நபர்களின் பெயர் விபரங்களை தெரிவிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் எம்.பி சுகாதார அமைச்சரிடம் வாய்மூல விடைக்கான கேள்வியினை கேட்டிருந்தார்.
சுகாதார அமைச்சர் இதற்கான பதிலை தெரிவிக்கவில்லை. இதன் பின் சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் கொவிட்-19 காலப்பகுதியில் இறந்து தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை அறிவிக்குமாறு என்னால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.
எனது முன்மொழிவுக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சில் கொவிட்-19 காலப்பகுதியில் இறந்து தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் இல்லை எனவும் கொவிட்-19 காலப்பகுதியில் இறந்து தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் பெறுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் எனக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.
இதன்படியே பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் எனது முன்மொழிவை சமர்ப்பித்தேன்.
எனது முன்மொழிவுக்கு பதிவாளர் நாயகத்தினால் எழுத்து மூலம் அனுப்பப்பட்ட பதில் அறிக்கையில், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் புள்ளியிடும் பிரிவானது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மரணங்களின் அடிப்படையில் மரணத்துக்கான அடிக்கோடிட்ட காரணம், என்ற முறையை பயன்படுத்தி சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வழிமுறையின்படி மரணத்துக்கான காரணத்தை குறியிடுகிறது.
இவ்வாறு குறியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட மாவட்டம் மற்றும் பாலினத்தின்படி காரணவாரியாக மரணங்களின் எண்ணிக்கை குறித்து தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, சர்வதேச குறியீட்டு முறையின்படி கொவிட்-19 காரணமாக 2021இல் பதிவு செய்யப்பட்ட இறப்புக்களின் எண்ணிக்கை மாவட்டம் மற்றும் பாலின வாரியான தகவல்கள் பதிவாளர் நாயக திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தவர்களால் இலங்கை முஸ்லிம்கள் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதற்காகவே குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு பதிலாக வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டது.
எனவே, காலம் எடுத்தாவது, கொவிட் - 19 காலகட்டத்தில் இறந்து எரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பிரதேச செயலகப் பிரிவு ஊடாக தகவல்களைப் பெற்று வழங்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
