(எம்.மனோசித்ரா)
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் குறைந்துள்ளதால், அதற்கமைய இலங்கையிலும் உடனடியாக எரிபொருள் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
நெஷனல் லங்கா நிறுவன நிதி மோசடியினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் புதன்கிழமை (17) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அவரைச் சந்தித்த போது, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
மத்திய கிழக்கு போரைக் காரணம் காட்டி சர்வதேச சந்தையில் விலை அதிகரித்துள்ளதாகக் கூறி, இந்த அரசாங்கம் உள்நாட்டிலும் எரிபொருள் விலைகளை உயர்த்தியது. ஆனால், தற்போதைய நிலவரப்படி போருக்கு முந்தைய நிலையை விட உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளதால் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. சர்வதேசத்தில் விலை கூடும் போது உள்நாட்டில் விலையை உயர்த்திய அரசாங்கம், உலக சந்தையில் விலை குறையும் போது ஏன் குறைக்கக் கூடாது?
ஆட்சிக்கு வருவதற்கு முன் எரிபொருள் வரிகளை நீக்கி, துறைமுக இறக்குமதி விலையிலேயே தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய இந்த அரசாங்கம், தற்போது உலக சந்தை விலைக்கு ஏற்பக் கூட விலையைக் குறைக்க முடியாமல் திணறி வருகிறது. அரசாங்கம் பொய் அரசியலையும், மக்களை ஏமாற்றும் செயல்களையும் கைவிட்டு, மக்கள் பக்கம் நின்று உடனடியாக எரிபொருள் விலைகளைக் குறைக்க முன்வர வேண்டும். மக்களின் துயரங்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார்.
