(க.சிவலிங்கமூர்த்தி)
சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன என்ற சந்தேகம் இருக்கிறது நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை முழுமையாக மறுப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள பொதுஜன ஐக்கிய முன்னணி கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இந்நாட்டில் இன்று சுயாதீனமாக இயங்கும் ஒரே நிறுவனம் நீதிமன்றமே ஆகும். மக்களின் இறுதி நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நீதிமன்றமே ஆகும். நீதிமன்றத்தின் கண்ணியத்துக்கும் சுயாதீனத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படும் வகையில் நான் எந்தவித கருத்தும் வெளியிடவில்லை. முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே தொடர்பாக முன்வைக்கப்படும் விசாரணைகள் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக நடைபெறுகிறதா அல்லது மாலிமா அரசியல் திட்டத்திற்கு ஏற்ப நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. அதனாலேயே இது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறேன்.
ஷாணி அபேசேகர உள்ளிட்டவர்கள் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து எம்மை அச்சுறுத்தி இந்த விடயங்களை சமரசப்படுத்த முடியும் என நினைத்தால் அது தவறான எண்ணம். குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தொடர்பாக இன்று பெரிய பிரச்சினைகள் உள்ளன. அவற்றின் செயற்பாடுகள் அரசியல் தேவைகளுக்கு ஏற்பவே அமைந்துள்ளன என்பது எனது விமர்சனம். குற்றப் புலனாய்வுப் பிரிவின் ரங்க திசாநாயக்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், ஷாணி அபேசேகர மற்றும் திலிப் பீரிஸ் ஆகியோர் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப செயற்படுகின்றனர். எனது விமர்சனம் நீதிமன்றத்தை நோக்கியதல்ல, அந்த நிறுவனங்களை நோக்கியதே.
அதேபோல் தற்போதைய அரசாங்கமே நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளது. கல்கிஸை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குடன் தொடர்புடைய நபரான ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்தது நீதிமன்ற சுயாதீனத்துக்கு எதிரான செயல். அதேபோல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையிலேயே ஷாணி அபேசேகரவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக நியமித்ததும் நீதிமன்ற அவமதிப்பு.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து கருத்துகளும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள், சாட்சியங்கள் மற்றும் அதிகாரபூர்வ விசாரணை ஆவணங்களின் அடிப்படையிலேயே முன்வைத்தவை. அசாத் மௌலானா தொடர்பான விடயங்களும் அந்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே சுட்டிக்காட்டப்பட்டவை. சஹரான் உள்ளிட்ட குழுவை கைது செய்ய பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பு இருந்தும் அது தவறவிடப்பட்டது. வவுணதீவு சம்பவம், மாவனெல்லை புத்தர் சிலைகள் உடைப்பு சம்பவம், தஸ்லிம் வழங்கிய தகவல்கள் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்க முடிந்தது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய விசாரணைகளிலும் சஹரான் குழுவே தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அந்த விசாரணைகள் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும். சர்வதேச அளவிலான மீளாய்வு விசாரணைகள் அவசியம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே தகவல்கள் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது மிகப்பெரிய தவறு. அதற்கான பொறுப்பு புலனாய்வு மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடமே உள்ளது. நீதிமன்றத்தை அவமதித்தது எமது தரப்பு அல்ல. அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே அதற்குப் பொறுப்பு. தேவையானால் சட்டத்தின் முன் எனது நிரபராதத்தைக் நிரூபிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
