(க.சிவலிங்கமூர்த்தி)
தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழிகள் திறந்தே காணப்படுகிறது. எனினும் அதற்கு அவர் முதலில் உயிருடன் இருக்க வேண்டியது அவசியமென்பதால் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபபை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு முன்னெடுக்கப்படும் விசாரணைகள், தற்போதைய அரசியல் சூழலில் தேவையற்ற ஒரு குழப்பத்தையே தோற்றுவித்துள்ளது. இந்தமுழு விவகாரமும் தற்போதைய நிலையில் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதான ஊடகங்கள் அனைத்தும் இதையே முதன்மைப் படுத்திச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
சலே தொடர்பில் நாட்டில் இருவேறு அரசியல் கருத்துக்கள் மோதிக்கொள்வதை நாம் காண்கின்றோம். கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிப் பீடம் ஏற்றுவதற்காகவே சுரேஷ் சலேயின் வழிநடத்தலில் உயிர்த்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மறுபுறத்தில், கோட்டாபய ராஜபக்ஷவை இவ்விவகாரத்தில் சிக்க வைப்பதற்காகவே சலே கைது செய்யப்பட்டுள்ளதாக மற்றுமொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.
இவ்வாறு இருவேறு அரசியல் தரப்புகள் மோதிக்கொள்வதால் தேவையற்ற குழப்பநிலையே நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை ஒரு சாதாரண விசாரணைப் போக்கில் கொண்டு செல்ல அனுமதித்திருக்க வேண்டும். சலேயைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, அங்கு அவர் வழங்கும் வாக்குமூலங்களின் அடிப்படையில் நீதிமன்றம் அடுத்தகட்டத் தீர்மானத்தை எடுத்திருக்க முடியும். அதனை விடுத்து, தற்போது சகல தரப்பினரும் பிரிந்து நின்று, முழுப் பிரச்சினையையும் ஒரு அரசியல் பகையாகவும் மோதலாகவும் மாற்றியுள்ளனர்.
சுரேஷ் சலே என்பவர் நாட்டின் ஒரு முக்கிய இராணுவ அதிகாரி என்பதை நாம் அறிவோம். கடந்த காலங்களில் எத்தனையோ முக்கிய இராணுவ அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், தண்டனைகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர். அவ்வாறிருக்கையில், இந்த விவகாரத்தை மாத்திரம் ஏன் இவ்வளவு பெரிய அரசியல் விவாதமாக மாற்ற வேண்டும்? இருதரப்பிலும் முன்னெடுக்கப்படும் விவாதங்கள் காரணமாகவே இந்த முழுப் பிரச்சினைக்கும் தேவையற்ற அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது.
எந்தவொரு அரசாங்கமும் தமக்கு நம்பிக்கையற்றவர்களை உயர் பதவிகளில் அமர்த்துவதில்லை. எனவே, இந்த அரசாங்கத்தின் கீழ் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் பதவிகளைப் பெற்றுக்கொண்டமை குறித்து குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமில்லை.
எமக்குத் தேவை நீதிமன்றத்தின் ஊடாக இந்த விவகாரத்துக்கு நீதியைப் பெற்றுக்கொள்வதாகும். இந்த விடயம் ஒரு வழக்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது, அங்கு நடைபெறும் வாதப் பிரதிவாதங்கள் மற்றும் சாட்சி விசாரணைகளின் பின்னர் நீதிபதிகள் ஒரு தீர்ப்பை வழங்குவார்கள். நாம் செய்ய வேண்டியது அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, நீதிமன்றத்தின் ஊடாகப் கருத்துக்களை முன்வைப்பதே தவிர, வெளியில் இருந்து கொண்டு தேவையற்ற அரசியல் குழப்பங்களை விளைவிப்பது அல்ல. அவ்வாறு செய்வது நாட்டின் நீதித்துறையையும் சட்ட நடைமுறைகளையும் அரசியலோடு குழப்பிக் கொள்ளும் ஒரு நிலையையே ஏற்படுத்தும்.
இதேவேளை, சலே தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். விசாரணைகளின் போதோ அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்படும் போதோ, கைதிகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது இன்று நேற்று நடக்கும் ஒரு விடயமல்ல. அது கடந்த காலங்களிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது. அத்தகைய அத்துமீறல்கள் அல்லது துன்புறுத்தல்களை எவரும் அங்கீகரிக்க முடியாது. அது குறித்து நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க முடியும், எடுக்கவும் வேண்டும்.
தடுப்புக் காவலில் இருக்கும் போது சலேவுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் அவமானங்கள் மற்றும் கசப்பான அனுபவங்கள் குறித்து, விசாரணை செய்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழிகள் திறந்தே உள்ளன. ஆனால், அதற்கு அவர் முதலில் உயிருடன் இருக்க வேண்டும். எனவே, சலே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும். போராட்டத்தை நிறுத்தி, மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று, உடல் ரீதியாகத் தேறி, தனக்குள்ள அநீதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கை முன்னோக்கி நகர்த்த வேண்டும்.
விசாரணைகளின் போது, சலேயின் கணினிக்கான கடவுச்சொல்லை அதிகாரிகள் கோரியுள்ளதாக அறிய முடிகிறது. கணினியின் கடவுச்சொல்லை வழங்க முடியாது எனின் அதற்கான காரணத்தை அவர் தெளிவுபடுத்த வேண்டும். தான் முன்னெடுத்த புலனாய்வு விசாரணைகள் மற்றும் சேகரித்த இரகசியத் தகவல்கள் அனைத்தும் அந்தக் கணினியிலேயே இருப்பதாக அவர் கூறக்கூடும். ஒருவேளை கடவுச்சொல்லை வழங்கினால், அதிலுள்ள அனைத்துத் தகவல்களையும் அதிகாரிகள் கைப்பற்றி, தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் அவருக்கு இருக்கலாம். இதனால் கடவுச்சொல்லைத் தன்னால் வழங்க முடியாது என்றும், தமக்குத் தேவையான முறையில் கணினியைப் பரிசோதித்துக் கொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிடலாம் என்றார்.
