(நமது நிருபர்)
சித்திரவதைகளுக்கு எதிராக அரசாங்கம் 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை' தெளிவாகப் பின்பற்றுகிறது என வெளிவிவகாரம், வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் ஐக்கிய நாடுகள் சித்திரவதை தடுப்பு உப குழுவின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் சித்திரவதை தடுப்பு துணைக் குழுவின் சிறப்பு நான்கு பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று (16) வெளிநாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பங்குப்பற்றினர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித்த ஹேரத், குறிப்பாக சித்திரவதைகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை' தெளிவாகப் பின்பற்றுகிறது. இக்கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக சட்டம், நிர்வாகம் மற்றும் நிறுவன ரீதியான பல நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் முன்னேற்றம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவித்தார்.
இலங்கை ஒன்பது முக்கிய சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளிலும் கையெழுத்திட்டுள்ள ஒரு நாடு என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த விஜயத்தின் மூலம் தானாக முன்வந்து ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளுக்கு இணங்குவதை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு தெளிவாக பிரதிபலிக்கிறது. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும்,சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும்,நல்லாட்சியை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் தளராத அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். இலங்கை அரசாங்கம் இந்த துணைக் குழுவுடன் திறந்த,முற்போக்கான மற்றும் வெளிப்படையான முறையில் செயற்படும் என்றும், அரசியலமைப்பிற்கு இணங்க இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை 2017 டிசம்பர் மாதத்தில் சித்திரவதைகளுக்கு எதிரான மற்றும் ஏனைய கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது அவமதிப்பான நடாத்துகை அல்லது தண்டனைகளுக்கு எதிரான உடன்படிக்கையின் விருப்பத்திற்குரிய நெறிமுறையில் கையெழுத்திட்டதன் பின்னர், ஐக்கிய நாடுகளின் சித்திரவதை தடுப்பு உப குழு இதற்கு முன்னர் 2019 ஏப்ரல் மாதத்தில் தனது முதலாவது விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டிருந்தது.
அதன் இரண்டாவது விஜயமாக ஆயிஷா ஷுஜூன் முஹம்மது (மாலைத்தீவு) தலைமையின் கீழ் வருகை தந்துள்ள இந்த தூதுக்குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன்,சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், அரசாங்க திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி உயர்மட்ட அரச அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
