(எம்.ஆர்.எம்.வசீம்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி முன்னிற்கும். அவ்வாறு இல்லாமல் ஈஸ்டர் தாக்குதலை வைத்துக்கொண்டு ஒருபோதும் நாங்கள் அரசியல் செய்ததில்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு அரசியல் செய்யாத ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியாகும். பொதுவாக மதத்தை பிரசாரம் செய்து நாங்கள் ஒருபோதும் அரசியல் செய்வதில்லை. அதனால் தற்போது இடம்பெறும் உயிரித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்பிலும் அந்த விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் ஒருபோதும் விமர்சனங்களை முன்வைத்ததில்லை..
ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம். அதற்காக நாங்கள் முன்னிட்போம்.
அதேநேரம் தற்போது குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அது இடம்பெறவேண்டியதாகும். ஆனால் விசாரணைகளில் அவருக்கு ஏதாவது அநீதி ஏற்படுவதாக இருந்தால், அதனை அவர் நீதிமன்றம் ஊடாக அதற்கான நீதியை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் விசாரணை இடம்பெற வேண்டிய இடத்தில் அது இடம்பெறவேண்டும். விசாரணை நடவடிக்கைகள் சரியான முறையில் இடம்பெறுகின்றதா என கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியதாகும்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருப்பது சுரேஷ் சலே மாத்திரமல்ல. இதற்கு முன்னர் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியாயின் ஏன் சலே தொடர்பில் மாத்திரம் முன்னுரிமை வழங்கி கதைக்க வேண்டும்.? ஊடகங்களும் தற்போது சலே விடயத்தை மாத்திரமே கதைக்கின்றன. ஆனால் நாட்டில் இன்று மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். விவசாயிகளுக்கு தேவையான உரம் இல்லை. எரிபொருள் விலை அதிகரிப்பால் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு வாழமுடியாத அளவுக்கு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
இவ்வாறு நாட்டில் பாரிய பிரச்சினைகள் இருக்கும்போது அதற்கு முன்னுரிமை வழங்காமல் சலே தொடர்பில் மாத்திரம் கதைப்பதால், மக்களின் பிரச்சினைகள் மறைக்கப்படுகின்றன. அதனால் ஊடகங்கள் நாட்டில் பிரதான பிரதான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி அதனை வெளிப்படுத்துவதன் மூலமே தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
