(நெவில் அன்தனி)
ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற விறுவிறுப்பும் பரபரப்பும் மிக்க ஆட்டங்களைத் தொடர்ந்து 2026 FIFA உலகக் கிண்ணம், சுமார் 1672 கோடி ரூபா பணப்பரிசு, தங்கப் பதக்கங்கள், சம்பியன்ஷிப் மோதிரங்கள் ஆகியவற்றை வென்றெடுக்கும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, முன்னாள் சம்பியன் ஸ்பெய்ன் ஆகிய அணிகள் சரித்திரம் வாய்ந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
இந்த இறுதிப் போட்டி நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு கண்டங்களின் கால்பந்தாட்ட சம்பியன்கள் இறுதிப் போட்டியில் விளையாடுவது இதுவே முதல் தடவையாகும்.
கோப்பா அமெரிக்கா சம்பியனாக ஆர்ஜன்டீனாவும் ஐரோப்பிய சம்பியனாக ஸ்பெய்னும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
1978, 1986, 2022 ஆகிய வருடங்களில் உலக சம்பியனான ஆர்ஜன்டீனா நான்காவது உலக சம்பியன் படத்திற்கு குறிவைத்து விளையாடவுள்ளது.
மேலும் 1958, 1962களில் சம்பியனான பிரேஸிலுக்குப் பின்னர் தொடர்ச்சியாக இரண்டு முறை சம்பியன் பட்டம் வெல்லும் முதலாவது அணி என்ற வரலாற்றுச் சாதனை ஏடுகளில் தனது பெயரைப் பதிவு செய்ய ஆர்ஜன்டீனா முயற்சிக்கவுள்ளது.
ஆர்ஜன்டீனா மீண்டும் உலக சம்பியனானால் உலகக் கிண்ணத்தை இரண்டு தடவைகள் வென்றெடுத்த முதலாவது அணித் தலைவர் என்ற வரலாற்றுச் சாதனையை லியோனல் மெஸ்ஸி நிலைநாட்டுவார்.
அதேவேளை, ஸ்பெய்ன் தங்களது இரண்டாவது உலக சம்பியன் பட்டத்தை வென்றெடுக்கும் முனைப்பில் களம் இறங்குகிறது.
அமெரிக்க மண்ணில் ஐரோப்பிய நாடொன்று ஒரே ஒரு முறை மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. பிரேஸில் தேசத்தில் 2014இல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவை மேலதிக நேரத்தில் 1 - 0 என வெற்றிகொண்டு அமெரிக்க கண்டத்தில் சம்பியனான முதலாவது ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஜேர்மனி பெற்றிருந்தது.
ஜெர்மனியைத் தொடர்ந்து அந்த சாதனையை நிகழ்த்துவதற்கான அரிய வாய்ப்பு இப்போது ஸ்பெய்னுக்கு கிடைத்துள்ளது.
கடந்துவந்த பாதை
ஆர்ஜன்டீனா தனது குழுவில் மூன்று இலகுவான வெற்றிகளை ஈட்டிய போதிலும் ஸ்பெய்ன் தனது குழுவில் காபோ வேர்டேயிடம் கடும் சவாலை எதிர்கொண்டு அப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டிருந்தது. மற்றைய இரண்டு போட்டிகளில் ஸ்பெய்ன் அவசியமான வெற்றிகளை ஈட்டியது.
இந்த இரண்டு அணிகளினதும் நொக்-அவுட் சுற்றுகள் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருப்பதால், ஒரு உண்மையான, விறுவிறுப்பான இறுதிப் போட்டி காத்திருக்கிறது எனக் கூறலாம்.
ஆர்ஜன்டினா தட்டுத்தடுமாறியே இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
காபோ வேர்டே, 10 வீரர்களுடன் விளையாடிய சுவிட்ஸர்லாந்து, எகிப்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான நொக் அவுட் போட்டிகளில் மேலதிக நேர கோல்கள், உபாதையீடு நேர கோல்கள் அல்லது கடைசி நிமிட கோல்கள் மற்றும் மீண்டு வந்து ஈட்டிய வெற்றிகள் நிறைந்த ஆர்ஜன்டீனாவின் பயணம் எளிதானதாக இருக்கவில்லை.
ஆனால், ஆர்ஜன்டீனா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையவோ, அழுத்தத்துக்கு உள்ளாகவோ இல்லை. அதுதான் அவ்வணியின் வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தது.
மறுபுறத்தில், பெல்ஜியம் மற்றும் போர்த்துக்கல்லுக்கு எதிரான நொக் அவுட் போட்டிகளில் ஸ்பெயின் கடைசி நேரத்திலேயே வெற்றிகளை ஈட்டியது. ஆனால், அரை இறுதிப் போட்டியில் பிரான்ஸை மிக இலவாக ஸ்பெய்ன் வெற்றிகொண்டிருந்தது.
ஒட்டுமொத்தத்தில் இந்த உலகக் கிண்ணத்தில் ஸ்பெய்ன் மிகவும் ஆதிக்கம் செலுத்திய அணியாக இருந்தது.
ஸ்பெய்ன் 4 - 2 - 3 - 1 என்ற கள வியூகத்துடனும் ஆர்ஜன்டீனா 4 - 4 - 2 என்ற கள வியூகத்துடனும் விளையாடவுள்ளன.
சம்பியனாகும் அணியினருக்கு சம்பயின்ஷிப் மோதிரங்கள்
பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனாகும் அணியினருக்கு தங்கப் பதக்கங்களுடன் சம்பியன்ஷிப் மோதிரங்கள் நினைவுப் பரிசுகளாக வழங்கப்படவுள்ளது. உலகக் கிண்ணத்தின் 96 வருட வரலாற்றில் சம்பியன்ஷிப் மோதிரங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
மோதிரத்தின் ஒரு பக்கத்தில் பீபா உலகக் கிண்ணம் பதிக்கப்பட்டுள்ளதுடன் மறுபக்கத்தில் சம்பியனாகும் அணியின் அடையாளம் பொறிக்கப்படும்.
புகழ்பெற்ற அமெரிக்க விளையாட்டுப் பாரம்பரியத்தை உலக கால்பந்தாட்டத்திற்கு கொண்டுவரும் வகையில், FIFA உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக சாம்பியன்ஷிப் மோதிரங்கள் வழங்கப்படுகின்றன.
2,026 மோதிரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் 30 மோதிரங்கள் வெற்றியாளர்களுக்கும் 1,996 மோதிரங்கள் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கும் வழங்கப்படும்.
பணப்பரிசுகள்
சம்பியன் ஆகும் அணிக்கு சுமார் 1672 கோடி ரூபாவும் (50 மில்லியன் டொலர்கள்) உப சம்பியனாகும் அணிக்கு வெள்ளிப் பதக்கங்களுடன் 1107 கோடி ரூபாவும் (33 மில்லியன் டொலர்கள்), மூன்றாம் இடத்தைப் பெறும் அணிக்கு 973 கோடி ரூபாவும் (29 மில்லியன் டொலர்கள்), நான்காம் இடத்தைப் பெறும் அணிக்கு 839 கோடி ரூபாவும் (25 மில்லியன் டொலர்கள்) பணப் பரிசுகளாக வழங்கப்படும்.
மற்றைய அணிகளுக்கும் பணப்பரிசுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அணிகள் (பெரும்பாலும்)
ஆர்ஜன்டீனா: கோல் காப்பாளர்: எமிலியானோ மார்ட்டினெஸ், பின்கள வீரர்கள்: நிக்கலஸ் டெக்லியாஃபிக்கோ, லிசாண்ட்டோ மார்ட்டினெஸ், கிறிஸ்டியன் ரொமீரோ, நஹூவெல் மொலினா, மத்திய கள வீரர்கள்: லியெண்ட்ரோ பரதெஸ், ரொட்றிகோ டி போல், அலெக்ஸிஸ் மெக் அலிஸ்டர், என்ஸோ பெர்னாண்டெஸ், முன்கள விரர்கள்: ஜூலியன் அல்வாரெஸ், லியோனல் மெஸ்ஸி (தலைவர்)
ஸ்பெய்ன்: கோல்காப்பாளர்: உனாய் சிமோன், பின்கள வீரர்கள்: பெட்டோ போரோ, ஆய்மெரிக் லப்போர்ட்டே, பாவ் குபார்சி, மார்க் கியூகியூரெல்லா, மத்திய கள வீரர்கள்: பேபியன் ருய்ஸ், அலெக்ஸ் பயேனா, ரொட்றி (தலைவர்), முன்கள வீரர்கள்: டெனி ஒல்மோ, லமின் யாமல், மைக்கல் ஒயார்ஸபால்.
