(நெவில் அன்தனி)
பீபா உலகக் கிண்ண அரை இறுதிகளில் தோல்வி அடைந்த இங்கிலாந்தும் பிரான்ஸும் வெற்றி மேடையில் வெண்கலப் பதக்கத்தை சூடிக்கொள்ளவேண்டும் என்ற குறிக்கோளுடன் மியாமி விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி சனிக்கிழமை (18) அதிகாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 3ஆம் இடத்துக்கான போட்டியில் மோதவுள்ளன.
டலாஸ் விளையாட்டரங்கில் இரண்டு முன்னாள் சம்பியன்களுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் ஸ்பெய்னிடம் 0 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பிரான்ஸ் தோல்வியைத் தழுவியது.
அட்லான்டா விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றைய அரை இறுதியில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவிடம் கடைசிக் கட்டத்தில் 1 - 2 என இறுதி ஆட்ட வாய்ப்பை மற்றொரு முன்னாள் சம்பியன் இங்கிலாந்து தவறவிட்டது.
இங்கிலாந்தும் பிரான்ஸும் 3 உலகக் கிண்ணப் போட்டிகள் உட்பட 32 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன.
அவற்றில் 17 - 10 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. 5 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன.
மூன்று உலகக் கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்து 2 இலும் பிரான்ஸ் ஒன்றிலும் வெற்றிபெற்றன.
1966இல் குழுநிலையில் இங்கிலாந்து 2 - 1 எனவும் 1982இல் குழுநிலையில் இங்கிலாந்து 3 - 1 எனவும் 2022இல் கால் இறுதியில் பிரான்ஸ் 2 - 1 எனவும் வெற்றிபெற்றன.
இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் இரண்டு அணிகளினதும் போட்டி முடிவுகளை ஒப்பிட்டுப்பார்த்தால் பிரான்ஸின் பெறுபேறுகள் சிறப்பாக இருப்பதை அவதானிக்கலாம்.
பிரான்ஸ் தனது 7 போட்டிகளில் 16 கோல்களைப் புகுத்தியதுடன் 4 கோல்களை மாத்திரமே எதிரணிகளுக்கு விட்டுக்கொடுத்துள்ளது.
இங்கிலாந்து தனது 7 போட்டிகளில் 14 கோல்களைப் போட்டதுடன் எதரணிகள் அதற்கு எதிராக 8 கோள்களைப் போட்டுள்ளன.
இவற்றை நோக்கும்போது இங்கிலாந்தின் பின்கள வீரர்களினதும் கோல்காப்பாளரினதும் திறமை போதுமானதாக இல்லை என்றே கூறத் தோன்றுகின்றது.
எவ்வாறாயினும் நடப்பு உலகக் கிண்ண அத்தியாயத்தில் இந்த இரண்டு அணிகளுக்கும் இது கடைசி போட்டி என்பதால் இரண்டு அணிகளும் ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்ப முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அணிகள் பெரும்பாலும்
பிரான்ஸ்: மைக் மெய்ஞான் (கோல் காப்பாளர்), மாலோ கஸ்டோ, மெக்சென்ஸ், லெக்ரொய்க்ஸ், ஜூல்ஸ் கவுண்டே, தியோ ஹேர்னெண்டெஸ் (நால்வரும் பின்கள வீரர்கள்), வொரன் ஸெய்ரே-எமேரி, நிக்கோலா கென்டே (மத்திய பின்கள வீரர்கள்), மைக்கல் ஒலிஸ், சேர்க்கி, டிசயர் டூவ் (மத்திய முன்கள வீரர்கள்), கிலியான் எம்பாப்பே (தலைவர், முன்கள வீரர்)
இங்கிலாந்து: ஜோர்டான் பிக்ஃபோர்ட் (கோல் காப்பாளர்), ஜோன் ஸ்டோன்ஸ், மார்க் குவேஹி, ரீஸ் ஜேம்ஸ், டிஜெட் ஸ்பென்ஸ் (பின்கள வீரர்கள்), டெக்லன் ரைஸ், எலியட் அண்டர்சன், மோர்கன் ரொஜர்ஸ், ஜூட் பெலிங்ஹாம் (மத்திய கள வீரர்கள்), அன்தன் கோர்டன், ஹெரி கேன் (தலைவர் - முன்கள வீரர்கள்)
