நியூசிலாந்தில் முதன்முறையாக புலம்பெயராது அங்குள்ள காடுகளில் வாழும் உள்நாட்டுப் பறவை ஒன்றிற்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய H5N1 ரகப் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் முதல் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட சில நாட்களிலேயே இந்த இரண்டாவது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் வட தீவில் உள்ள வைராடப்பா பிராந்தியத்தில், உள்ளூர் மக்களால் 'காஹு' என்று அழைக்கப்படும் 'ஸ்வாம்ப் ஹாரியர் ஹாக்' வகை பருந்து ஒன்றுக்கே இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உயிரியல் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரூ ஹொகார்ட் தெரிவித்துள்ளார்.
இந்த பருந்துகள் பொதுவாக குளிர்காலத்தில் வேட்டையாடுவதற்காகக் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லக்கூடியவை. அங்கு ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிற பறவைகளை வேட்டையாடி உண்பதன் மூலமோ அல்லது அவற்றின் எச்சங்களை உண்பதன் மூலமோ இப்பருந்திற்குத் தொற்று பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
கடந்த புதன்கிழமை, வெலிங்டன் நகருக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட 'பிரவுன் ஸ்குவா' என்ற புலம்பெயர் கடற்பறவை ஒன்றிற்கு நாட்டின் முதலாவது பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதுவரை நாட்டின் வணிக ரீதியிலான கோழிப்பண்ணைகளிலோ அல்லது வளர்ப்புப் பறவைகளிலோ இந்தத் தொற்று கண்டறியப்படவில்லை என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், அண்டை நாடான அவுஸ்திரேலியாவிலும் முதன்முறையாக அதன் உள்ளூர் கடற்பறவை ஒன்றிற்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் அங்கு பதிவான வழக்குகள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து வந்த புலம்பெயர் பறவைகளுடன் மட்டுமே தொடர்புடையதாக இருந்தன.
உள்நாட்டுப் பறவைக்குத் தொற்று பரவியதை அடுத்து, நியூசிலாந்து சுகாதார மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
நாட்டின் மிக அரிய, அழிவின் விளிம்பிலுள்ள 5 முதன்மையான பறவை இனங்களைச் சேர்ந்த 300 முக்கிய இனப்பெருக்கப் பறவைகளுக்கு விசேட தடுப்பூசி செலுத்தும் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் நியூசிலாந்திற்கே உரித்தான, பறக்க முடியாத அரிய பறவை இனங்களான 'தாகாஹே' மற்றும் 'காகாபோ' கிளிகள் ஆகியவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
