நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி 17 வயது இளைஞன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலி - கொழும்பு பிரதான வீதியில் காலி சிறைச்சாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
காலி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முற்பட்டுள்ளது. இதன்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நாகொட பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முதியவர், உடனடியாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பியகம - கொழும்பு பிரதான வீதியின் பிலபிட்டிய பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
களனி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பாதசாரி ஒருவரை மோதிவிட்டு, பின்னர் அருகில் இருந்த மின் கம்பத்துடன் பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அதன் பின்னால் பயணித்தவர் மற்றும் பாதசாரி ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பெதியாகொட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த வீதி விபத்துக்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
