தாய்லாந்து, பாங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைத்துச் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான மலர்ச் செடிகளுடன் இலங்கை பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL 403 என்ற விமானம் மூலம் அப்பயணி கட்டுநாயக்கவை வந்தடைந்தார்.
விமான நிலையத்தின் பசுமைப் பிரிவு வழியாக அவர் வெளியேற முயன்ற போது, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் இலங்கை சுங்கப் பிரிவின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து அவரை மறித்துச் சோதனை மேற்கொண்டனர். இதன்போது அவரது பைகளிலிருந்து மலர்ச் செடிகள் கண்டெடுக்கப்பட்டன.
நாட்டின் 1993 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, தாவரங்களையோ அல்லது அவற்றின் பாகங்களையோ நாட்ககுள் இறக்குமதி செய்வதற்கு கடுமையான விதிமுறைகள் உள்ளன.
விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஏற்றுமதி செய்யும் நாட்டிலிருந்து (இங்கு தாய்லாந்து), அந்தத் தாவரங்களில் பூச்சிகள் மற்றும் நோய்க்கிருமிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் 'தாவர தனிமைப்படுத்தல் சான்றிதழ்' சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறிச் செய்யப்படும் எந்தவொரு இறக்குமதியும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான செயலாகவும் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுங்கப் பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கடத்தி வரப்பட்ட அனைத்து மலர்ச் செடிகளும் அரசுடைமையாக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பெண் பயணிக்கு நிதிய அபராதமும் விதிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட செடிகள் அனைத்தும் அடுத்தகட்ட அழிப்பு நடவடிக்கைகளுக்காக விமான நிலைய தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
