(செ.கவிஷனா)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் மரணங்களின் பின்னால் அதிகாரிகளின் துப்பாக்கிச் சூடுகளும் ஏனைய காரணிகளும் உள்ளதா என்ற நிலையில் அரசாங்கம் இவை குறித்து ஏன் முறையான விசாரணைகளை நடத்தி, உண்மைகளை வெளிப்படுத்த தயங்குகிறது என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் இடம்பெறும் சம்பவங்களின்போது, சிறைச்சாலை அதிகாரிகள் கொலை செய்யப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதேநேரம் சிறைக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் சந்தேக நபர்களின் உரிமைகள் முற்றாக மறுக்கப்பட்டு, அவர்களின் மரணங்கள் திட்டமிட்ட முறையில் மூடிமறைக்கப்படுகிறது. கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கடமையாற்றும் அதிகாரிகளின் மரணங்கள் குறித்து மாத்திரம் ஊடகங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்ற போதிலும், கைதிகளின் மரணங்கள் குறித்து செய்யப்படுவது அநீதியானது.
தற்போது சிறைச்சாலைகளுக்குள் சுமார் 33 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், தமக்கு கிடைத்துள்ள நம்பகமான தகவல்களின்படி அதில் 23 மரணங்கள் மிகவும் கொடூரமான முறையில் இடம்பெற்றுள்ளதாகவும், அவ்வாறு உயிரிழந்த 23 பேரும் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படாத, வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள்.
சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும், ஏனைய சந்தேக நபர்கள் சிறைச்சாலை அதிகாரிகளின் துப்பாக்கிச் சூடுகளினாலேயே மரணமடைந்துள்ளனர். ஆனால் இது குறித்த உண்மைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த அரசாங்கம் தயங்குவது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
நீதிமன்றத்தால் ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் கூட, அவரது உயிரை எடுப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்பதால், சிறைக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் மரணங்கள் குறித்தும், பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடுகள் குறித்தும் அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டும். அவற்றுக்கான முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும், நாட்டில் தற்போது விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மூடிமறைப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான சிறைச்சாலைச் சம்பவங்களைத் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி, மக்களின் கவனத்தை முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்புவதற்கு முயற்சிக்கிறது என்றார்.
