(இராஜதுரை ஹஷான்)
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் மனித வளப் பற்றாக்குறையை குறைப்பதற்காக புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுதல், சேவைத் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை திருத்தியமைத்தல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் சேவை நிலைமைகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகளைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் தாமதத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்து நீதி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல்களைக் குறைப்பது, நிர்வாக செயற்திறனை மேம்படுத்துவது மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலேயே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், புதிய கட்டடங்களை நிர்மாணித்தல், தற்போதுள்ள வசதிகளை மறுசீரமைத்தல், சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களைப் நிரப்ப வேண்டியதன் அவசியம் மற்றும் கைதிகளை திறம்பட நிர்வகிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
குறிப்பாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் மனித வளப் பற்றாக்குறையை குறைப்பதற்காக புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுதல், சேவைத் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை திருத்தியமைத்தல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் சேவை நிலைமைகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அரசாங்க இரசாயணப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகளைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் தாமதத்தை குறைப்பதற்காக, குறித்த திணைக்களத்தின் திறனை அதிகரித்தல், நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.
சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் கட்டுப்படுத்துவது வெறுமனே நிர்வாக ரீதியான விடயமாக அல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதி செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், நீதிமன்றம், ஸ்ரீலங்கா பொலிஸ், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையில் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
