(க.சிவலிங்கமூர்த்தி)
நாட்டின் பெரும்பான்மையான மக்களின் குடும்பப் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ள போதிலும், அரசாங்கத்தின் பேரிடர் முகாமைத்துவம் மற்றும் ஊழல் எதிர்ப்பு போன்ற நல்லாட்சி நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் பாராட்டு நிலவுவதாக தினன தகுண கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அண்மையில் நடத்திய சமூகக் குறிகாட்டி கருத்துக்கணிப்பின் மூலம் வெளிவந்துள்ள பொருளாதார நிலை, பேரிடர் முகாமைத்துவம் மற்றும் இன ரீதியான திருப்தி நிலை சார்ந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தினன தகுண கூட்டமைப்பின் தலைமைத்துவ சபை மற்றும் செயற்குழு வியாழக்கிழமை (16) விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கருத்துக்கணிப்புத் தரவுகளின்படி 51.4 சதவீதமானோர் தங்களது குடும்பப் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். வாழ்க்கைச் செலவைக் கையாளுவது குறித்து நாடு சமமாகப் பிளவுபட்டுள்ள பின்னணியிலும், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சித் திறன் குறித்து 62.8 சதவீத திருப்தி காணப்படுகிறது.
முன்னைய ஆட்சிமுறைகளால் முறையாக சீரழிக்கப்பட்ட நிறுவன மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டே தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் நினைப்பதே இதற்குக் காரணமாகும்.
அதேவேளை, பொருளாதாரம் சாரா, அடையாள மற்றும் அமைப்புரீதியான விளைவுகள் தொடர்பாக அரசாங்கம் மிக உயர்ந்த புள்ளிகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக, தித்வா சூறாவளி முகாமைத்துவம் மற்றும் நிவாரணச் சேவைகள் குறித்து 68.6 சதவீதமானோரும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பாக 51.6 சதவீதமானோரும் திருப்தியடைந்துள்ளனர்.
தித்வா சூறாவளியின் சில மோசமான விளைவுகள் அரசாங்கத்தின் அலட்சியத்தால் ஏற்பட்டவை என்று எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகளை மக்கள் தமக்குள் எடுத்துக்கொள்ளவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
இருப்பினும், அரசாங்கத்தின் மீதான திருப்தி நிலையில் தெளிவான இன ரீதியான பிளவும் காட்டப்பட்டுள்ளது. சிறுபான்மைச் சமூகங்களிடையே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சித் திறன் குறித்த திருப்தி 80 சதவீதத்தை நெருங்கிய போதிலும், சிங்களச் சமூகத்தினிடையே அது 57.3 சதவீதம் வரை கணிசமாகக் குறைந்துள்ளதுடன், அவர்கள் 26.5 சதவீத என்ற அதிகபட்ச அதிருப்தியையும் பதிவு செய்துள்ளனர். மேலும், சிங்களவர்களில் 53.9 சதவீதமானோர் தங்களது குடும்பப் பொருளாதாரம் மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, எதிர்பார்ப்புகளுக்கும் யதார்த்தத்து;கும் இடையிலான கடுமையான மோதலை சிங்களப் பெரும்பான்மையினரே அதிகம் எதிர்கொண்டு வருகின்றனர். சிங்களச் சமூகம் எப்போதுமே இலங்கையின் அரசியல் மாற்றங்களின் பாரம்பரிய அடிப்படையாகும் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, மக்கள் கருத்தில் நிலவும் தங்களது பொருளாதார வாழ்க்கை குறித்த அதிருப்தியானது சமூக அபிலாஷைகளைத் தாண்டி ஓர் அரசியல் விரக்தியாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.
எனவே, எதிர்க்கட்சியானது வெறுமனே பொருளாதாரத்தைப் பற்றி மட்டும் கூச்சலிடாமல், பொதுமக்கள் கோரும் உண்மையான பொருளாதார சீர்திருத்தங்களின் உண்மையான பிணையாளராகத் தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
