(க.சிவலிங்கமூர்த்தி)
தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவினால் ஏற்பட்டுள்ள பாரிய நட்டத்தை மின்சாரக் கட்டண அதிகரிப்பு ஊடாகவோ அல்லது பொதுமக்களின் வரிப்பணம் மூலமாகவோ மக்கள் மீது சுமத்துவதைத் தடுக்குமாறு கோரி முன்னிலை சோசலிசக் கட்சியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அண்மையில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக தெரிவித்து அக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு புதன்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்துக்கு முன்னால் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவிக்கையில்,
இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த நிலக்கரியைக் கொண்டு எதிர்பார்த்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனதால் அரசாங்கத்துக்குப் பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலைக்கு வாங்கியமை, மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய டீசல், எரிபொருள் ஆகியவற்றை அதிக விலைக்குப் பயன்படுத்தியமை மற்றும் மத்திய கிழக்கு போர்ச் சூழலால் எரிபொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளமை போன்ற காரணங்களால் இந்த நட்டம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அத்துடன் எல் நினோ காலநிலை எச்சரிக்கை காரணமாக நீர்மின் உற்பத்தியும் வீழ்ச்சியடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சூழலிலேயே, மக்கள் மீதான இந்தச் சுமையை எதிர்க்கும் நோக்கில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளோம்.
இந்த மனுவின் ஊடாக, நட்டத்தை மக்களிடமிருந்து வசூலிப்பதைத் தடுக்கும் தடை உத்தரவையும், இதற்குப் பொறுப்பான அதிகாரிகளிடமிருந்து நட்டத்தை வசூலிப்பதற்கான பேராணை உத்தரவையும் நாம் கோரியுள்ளோம். வழக்கு விசாரணை முடிவடையும் வரை மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதைத் தடுத்து நிறுத்தும் இடைக்கால உத்தரவையும், அதற்கான வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதற்கான தடையாணை உத்தரவையும் பிறப்பிக்குமாறு கோரியுள்ளோம்.
இன்றைய விசாரணையின் போது, சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் பாரிய நட்டமொன்று ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்ட போதிலும், அதனை மின்சாரக் கட்டணம் மூலம் மக்கள் மீது சுமத்த மாட்டோம் எனத் தெரிவித்தனர். எனினும், மின்சாரக் கட்டணம் மூலம் மட்டுமன்றி, பருப்பு, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகள் மூலம் திறைசேரிக்கு நிதியைத் திரட்டி, மறைமுகமாக மக்கள் மீது இந்த நட்டத்தைச் சுமத்துவதையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என நாம் வலியுறுத்தியுள்ளோம்.
மக்களின் சார்பாக இந்தச் சட்டப் போராட்டத்தை ஆகஸ்ட் 24ஆம் திகதியும் எமது சட்டத்தரணிகள் குழுவோடு இணைந்து நீதிமன்றத்தின் முன்னிலையில் நாம் தொடர்ச்சியாக முன்னோக்கிக் கொண்டு செல்ல நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.
