திருகோணமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர்சிலை தொடர்பான வழக்கு புதன்கிழமை (17) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த சட்டவிரோத கட்டுமானம் தொடர்பில் மூவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டப்பணம் செலுத்தியிருந்ததுடன் குறித்த வழக்கு எதிர்வரும் யூலை மாதம் 7ஆம் திகதி விசாரணைக்காக திகதியிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது புதன்கிழமை (17) விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது குறித்த வழக்குடன் தொடர்புபட்ட ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்ட 10 பேர் மற்றும் இதுவரை நீதிமன்றில் முன்னிலையாகாத மூவர் உட்பட 13 பேர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது குறித்த மூவரும் நீதிமன்றில் முன்னிலையாகி குற்றத்தை ஒப்புக் கொண்டு தலா 25000 ரூபா தண்டப்பணத்தை செலுத்தி குறித்த வழக்கில் இருந்து வெளியேறியுள்ளனர். இதேவேளை குறித்த வழக்குடன் தொடர்புபட்ட மேலும் இருரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் குறித்த வழக்கானது சர்ச்சைக்குரிய புத்தர்சிலை மற்றும் பொலிஸார்மீதான தாக்குதல் உள்ளிட்ட ஏனைய குற்றங்கள் தொடர்பாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் குறித்த வழக்கானது ஏனைய குற்றங்களுக்காக தொடர்ந்து இடம்பெறும் எனவும் குறித்த சட்டவிரோத கட்டுமானத்தை கரையோர பாதுகாப்பு சட்ட அதிகாரத்திற்கு அமைய உடைத்து அகற்ற கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பகுதியில் புத்தர்சிலைக்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தினை அகற்ற முடியும் எனவும் தெரிய வருகின்றது.
திருகோணமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர்சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேருக்கும் பல நிபந்தனையின்கீழ் திருகோணமலை மேல் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும், பத்தாயிரம் ரூபா பெறுமதியான காசுப்பிணையிலும் பல முக்கிய நிபந்தனையின் கீழும் பிணை வழங்கி விடுதலை செய்திருந்தது. இதன் பின்னர் குறித்த வழக்கானது இன்றைய தினம் (17) விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தது.
திருகோணமலை பிரதான டச்பே கடற்கரை பகுதியில் கடற்கரையில் இருந்து சுமார் 11 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் கடந்த வருடம் 2025 நவம்பர் மாதம் 16, 17ஆம் திகதிகளில் சட்ட விரோதமான முறையில் கட்டுமானத்தை மேற்கொண்டார்கள் எனவும் புத்தர் சிலையை நிறுவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் 17.11.2025 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கானது 26.11.2025 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் தரப்பில் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை. பின்னர் 14.01.2026 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது முன்னிலையாகி இருந்த கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 பௌத்த பிக்குகள் உட்பட சிவில் சமூகத்தினர் ஐவருமாக ஒன்பது பேரையும் 19.01.2026 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
பின்னர் குறித்த வழக்கானது 19.01.2026 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேலும் ஒரு எதிராளி சரணடைந்திருந்ததுடன் எதிராளிகள் சார்பில் கோரப்பட்ட பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு 10 பேருக்கும் விளக்கமறியல் 28.01.2026 வரை நீடிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் குறித்த வழக்கினை நிராகரிக்கக்கோரி எதிரிகளால் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அது பெப்ரவரி 3ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து குறித்த வழக்கானது பெப்ரவரி 02, பெப்ரவரி 09 ஆகிய திகதிகளில் விசாரணைக்காக அழைக்கப்பட்டதுடன் கடந்த 9ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரும் தலா 10 இலட்சம் பெறுமதியான இரு சரீரப் பிணையிலும், பத்தாயிரம் ரூபா பெறுமதியான காசுப்பிணையிலும் மேல் நீதிமன்றினால் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டனர்.
