நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து சடலமாக புதன்கிழமை (17) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மையில் தனது காதலனுடன் நுவரெலியாவுக்குச் சென்று, தனியார் விடுதி ஒன்றில் குறித்த பெண் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (16) இரவு 10.30 மணியளவில் அவ்விடுதியில் அப்பெண் தங்கியிருந்த அறையில் இருந்து, அவர் தூக்கிக் கொண்டுசெல்லப்பட்டு, காரொன்றில் ஏற்றிச் செல்லப்பட்டமை விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
அந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பெண்ணின் மூத்த சகோதரன் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, நுவரெலியா பொலிஸார் நடத்திய விசாரணையில், வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய வைத்தியரான பெண்ணும் கன்னொருவ பகுதியை சேர்ந்த அவரது 35 வயதுடைய காதலனும் நுவரெலியாவிற்கு கடந்த 3ஆம் திகதி சென்று குறித்த தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பின்னர், அந்த காதலன், பெண்ணை கொலை செய்துவிட்டு, அவரை தூக்கிக்கொண்டு தனியார் விடுதியிலிருந்து வெளியேறி, காரில் ஏற்றிச் சென்று கண்டி - தெல்தெனிய பகுதியில் சடலத்தை விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும் குறித்த பெண்ணுடன் நுவரெலியாவில் உள்ள தனியார் விடுதிக்கு வருகைதந்த சந்தேக நபரை இதுவரை கைது செய்யவில்லை எனவும் விசாரணைகளை தொடர்ந்து நடத்திவரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் குறித்த இருவரும் தங்கியிருந்த தனியார் விடுதியில், சம்பவ இடத்தில் உள்ள தடயங்கள், சிசிரிவி காட்சிகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விடுதி ஊழியர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு, தொலைபேசி அழைப்புத் தரவுகள் சேகரிக்கப்பட்டு, விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
