அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை (17) அகழ்வுப் பணிகள் நடைபெற்றன.
அக்காணியில் பக்கோ இயந்திரம் மூலம் மண் அகழப்பட்டது. எனினும், அந்த இடத்தில் எந்தவொரு தடயப் பொருளும் கிடைக்காததைத் தொடர்ந்து, அகழ்வுப் பணி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் இக்காணியின் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து மறைத்து வைத்திருந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இந்த அகழ்வு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காணி அமைந்திருக்கும் குறித்த பகுதியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருந்ததாகவும் அப்பகுதி, அன்றைய நாட்களில் புலிகளின் மார்க்கமாக அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காணியில் நடத்தப்பட்ட மண் அகழ்வுப் பணியானது சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், அம்பாறை சம்மாந்துறை விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்டது.
இன்று காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை அகழ்வுப் பணிகள் நடைபெற்றபோதும் அந்நிலத்தில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, அனைவரும் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
