(இராஜதுரை ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதும், உண்மையை வெளிப்படுத்துவதும் பௌத்த – கத்தோலிக்க நல்லிணக்கத்துக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எமக்கு தெரியாது. உதய கம்மன்பில போன்றவர்களின் கருத்துக்கள் இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தன்மையில் காணப்படுகிறது.
விசாரணைகள் சிறந்த முறையில் இடம்பெற்று பல விடயங்கள் வெளிவருகின்றன. உண்மை வெளிப்படும் தன்மை காணப்படுகிறது. இவ்வாறான பின்னணியில்தான் ஒருசிலர் திட்டமிட்ட வகையில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு பதவி வழங்குமாறு கத்தோலிக்க சபை ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
கத்தோலிக்க சபையின் காரியாலயத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் எமக்கு பூரண நம்பிக்கை காணப்படுகிறது. உண்மை வெளிவருகின்ற நிலையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதையும், செயற்கை நுண்ணறிவு முறைமை ஊடாக வடிவமைக்கப்பட்ட படங்கள் பரிமாற்றப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. உண்மை வெளிவருவதை தடுப்பதற்காகவே ஒரு தரப்பினர் இவ்வாறு செயற்படுகிறார்கள். நாட்டு மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்ததால்தான் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை 2019.04.21ஆம் திகதி காலை திருப்பலியை ஒப்புக்கொடுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 2020ஆம் ஆண்டு குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்து தொடர்பில் 2020.09.17ஆம் திகதி கத்தோலிக்க சபை தெளிவுபடுத்தி விளக்கம் அளித்திருந்தது. பேராயர் உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முதல் நாளன்று நள்ளிரவு விசேட திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். மறுநாள் காலை திருப்பலியை அவர் ஒப்புக்கொடுப்பதில்லை. இது வழமையானதே. அவர் கத்தோலிக்க திருச்சபையில் உள்ள சிற்றாலயத்தில் அன்றைய தினம் ஒப்புக்கொடுத்தார். இதுதான் வழமையானது.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவுக்கு முன்கூட்டியதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது, ஆகவே பேராயருக்கும் முன்கூட்டியதாகவே அறிவிக்கப்பட்டிருக்கும் என்ற குற்றச்சாட்டும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு திட்டமிட்ட வகையில் பரிமாற்றப்படுகிறது.
2019.04.21ஆம் திகதி குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னரே பேராயருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் ஒருபோதும் விசேட பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்கிறோம்.
குண்டுத்தாக்குலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் சிறந்த முறையில் இடம்பெறுகின்றன. விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படுவதை எம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
இப்ராஹிம் பிணையில் விடுதலை
குண்டுத்தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஒரு தரப்பினர் திட்டமிட்டிருந்தார்கள். பேராயரின் தலையீட்டினால் அந்த பேரழிவு தடுக்கப்பட்டது. குண்டுத்தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களை பலர் தற்போது மறந்துவிட்டார்கள். ஆனால் நாங்கள் மறக்கவில்லை.
குண்டுத்தாரிகளின் தந்தையான இப்ராஹிம் பிணையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கத்தோலிக்க சபை ஏன் கேள்வி கேட்பதில்லை என்று குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். குண்டுத்தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட இப்ராஹிம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு ஊடாகவே பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இப்ராஹிம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாரே தவிர அவர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்படவில்லை. ஆகவே, இந்த விடயத்தில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எவருக்கும் கருத்து தெரிவிக்க முடியாது. இப்ராஹிமிற்கு நீதிமன்றத்தால் தான் பிணை அளிக்கப்பட்டது. ஆகவே அதில் எவருக்கும் முரண்பாடு காணப்படுமாயின் நீதிமன்றத்தை நாடலாம்.
சானி – ரவி செனவிரத்னவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கவில்லை
2024ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு பதவி வழங்குமாறு கத்தோலிக்க சபை ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை.
2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் அதுவரை காலமும் விசாரணைகளை மேற்கொண்ட விசாரணை அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்தார். ஒருசிலரை பதவி நீக்கம் செய்தார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் குண்டுத்தாக்குதல் குறித்து ஆரம்பத்தில் விசாரணைகளை மேற்கொண்ட தரப்பினரை நியமியுங்கள்” என்று மாத்திரமே வலியுறுத்தப்பட்டது.
உதய கம்மன்பிலவின் கருத்து இன நல்லிணக்கத்தை பாதிக்கும்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் உதய கம்மன்பில உட்பட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கருத்து தெரிவிப்பதை அவதானிக்க முடிகிறது.
இவர்களின் கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தன்மையில் காணப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. வெகுவிரைவில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதும், உண்மையை வெளிப்படுத்துவதும் பௌத்த – கத்தோலிக்க நல்லிணக்கத்துக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எமக்குத் தெரியாது.
உதய கம்மன்பில போன்றவர்களின் கருத்துக்கள் இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தன்மையில்தான் காணப்படுகிறது. விசாரணைகள் மீது நாட்டு மக்கள் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். எதிர்க்கட்சியின் உறுப்பினர்களில் ஒருசிலர் தான் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். நாட்டு மக்கள் தற்போது தெளிவாக உள்ளார்கள்.
சலேவின் மடிக்கணினியின் இரகசிய தகவல்கள் அரசுக்கு சொந்தமானதே
குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஸ் சலே அவரது மடிக்கணினியின் கடவுச்சொல்லை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்க கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
சுரேஸ் சலே ஓய்வுப்பெற்ற புலனாய்வு அதிகாரி, அவர் தற்போது சேவையில் இல்லை. நாட்டின் புலனாய்வு தொடர்பான தகவல்களை தற்போது அவர் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க முடியாது. அவரது மடிக்கணினியில் உள்ள இரகசிய தகவல்கள் அரசுக்கு சொந்தமானது.
தான் நிரபராதி என்றால் சுரேஸ் சலே விசாரணைகளுக்கு போதுமான ஒத்துழைப்பை வழங்கி நீதிமன்றத்தில் தனது தரப்பு நியாயத்தை நிரூபித்து விடுதலையாகலாம். அதனை விடுத்து இவ்வாறு முறையற்ற வகையில் செயற்படக்கூடாது என்றார்.
