(செ.கவிஷனா)
இலங்கையின் பொருளாதாரத்தை உலகளாவிய ரீதியில் பன்முகப்படுத்தி வலுப்படுத்தும் நோக்கில், 2026 – 2030 காலப்பகுதிக்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஏற்றுமதி வருமானமாக ஈட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் 2026 – 2030 உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் பொருளாதாரத்தை உலகளாவிய ரீதியில் பன்முகப்படுத்தி வலுப்படுத்தும் நோக்கில், 2026 – 2030 காலப்பகுதிக்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் நேற்று உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டமிடப்படாத பயணங்களைத் தவிர்த்து, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய முறையான தேசியக் கொள்கையின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இப்புதிய திட்டத்தின் கீழ், வரும் 2026 ஆம் ஆண்டிற்குள் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், 2030 ஆம் ஆண்டிற்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஏற்றுமதி வருமானமாக ஈட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வருடத்தில் முதலாவது காலாண்டில் ஏற்கனவே 4.5 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையை சேவைத்துறையை மையமாகக் கொண்ட பொருளாதாரத்திலிருந்து, முறையான கைத்தொழில் துறையை மையமாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றுவதற்கும் இந்த திட்டம் வழிவகுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கனிம வளங்களை வெறும் மூலப்பொருட்களாக மாத்திரம் ஏற்றுமதி செய்யாமல், அவற்றிற்கு பெறுமதி சேர்த்தல் ஊடாக அதிக இலாபம் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, புல்மோட்டை கனிம மணல் உள்ளிட்ட உள்நாட்டு வளங்களை முறையான முதலீடுகள் மூலம் பயன்படுத்துவதற்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் கைத்தொழில், பெருந்தோட்ட மற்றும் கடற்றொழில் ஆகிய அமைச்சுகள் ஒருங்கிணைந்து செயற்படத் தொடங்கியுள்ளன. இதன் மூலம் இலங்கை தேயிலை, கடல் உணவுகள், கடல் தாவரங்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற தயாரிப்புகளை இலங்கையின் தனித்துவமான அடையாளத்துடன் சர்வதேச சந்தையில் சந்தைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் தனித்துவமான புவிசார் அமைவிடம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பு ஆகியன சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் சாதகமான தன்மைகளைப் பயன்படுத்தி ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியங்களில் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இத்திட்டத்திற்கான முழுமையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது. அதேவேளை, அரச நிறுவனங்களை விற்பனை செய்யாமல், முறையான மறுசீரமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகத்தின் மூலம் அவற்றை இலாபம் ஈட்டும் நிலைக்கு மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான நில வசதிகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக இந்த தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டமானது இலங்கையை ஒரு நிலையான மற்றும் பலமான ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது என்றார்.
