நம்நாட்டில் புகழ் பூத்த மேடை நாடகம் மற்றும் திரைப்படக் கலைஞருமான அமரர் கலைவேந்தன் ஸ்ரீசங்கருக்கு அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.
கடந்த 46ஆண்டு காலமாக இதனை தொடரச்சியாக அவரது பிரதான சிஷ்யர் வீ.சண்முகராஜா நடத்தி வருகிறார்.
வரும் 21.06.2026 மாலை 5.30 மணிக்கு கொழும்பு-14, லெயாட்ஸ் புரோட்வே சந்தியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற வுள்ளது.
யாழ்.பருத்திதுறை பூதவராயர் வீதியைச் சேர்ந்த கலைஞர் ஸ்ரீசங்கர் தமது தொழில் காரணமாக கொழும்பில் தடம் பதித்து தலைநகரில் மேடை நாடகங்களில் நடித்து மிகவும் புகழ் பெற்றவர் ஆவார்.
இந்த ஆர்வமும் வேட்கையும் அவரை திரையுலகிற்கு இழுத்து சென்றது. நம்நாட்டில் தமிழ் திரைப்படத் துறையை கட்டியெழுப்ப வேண்டும் என பெரும் ஆர்வம் கொண்ட இவர் நம்நாட்டில் பல திரைப்படங்களில் நடித்ததுடன் மஞ்சள் குங்குமம் என்ற படத்தில் நாயகனாக நடித்து புகழ் பெற்றவர் ஆவார்.
இந்தப் புகழ் இவரை நடிகர் திலகம் சிவாஜி கணேஷனின் நட்புக்கு பாத்திரமாக்கியது. இதன் காரணமாக அவரது முதலாவது சினிமாஸ்கோப் படமான ராஜராஜ சோழன் படத்தில் ஈழத்துப் புலவராக நடித்து நமது நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்.
இவரை வருடாந்தம் நினைவு கூர ஸ்ரீசங்கர் நற்பணி மன்றத்தை அமைத்து அவருக்காக சிலை நிறுவி தொடர்ந்து 46 ஆண்டுகளாக பல்வேறு சமுகப்பணிகளோடு இந் நிகழ்வை நடத்திவரும் சண்முகராஜா உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்.
