கட்டான பகுதியில், 6 கிராம் 210 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுவெல்லேகம பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைவாக , விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து சந்தேகநபரை பொலிஸார் கைது செய்திருந்தனர். கைது நடவடிக்கையின் போது 6 கிராம் 210 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
கைதான நபர் மீரிகம, கிதுல்வல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவராவர். சந்தேகநபரை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார், மேலதிக விசாரணைகளுக்காக ஜூன் 16ஆம் திகதிவரை தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது பூகொட, கிரிந்திவெல, கொஸ்கம, வீரம்புகெதர, நாரம்மல, பொல்கஹவெல, பாதுக்க, கட்டுநாயக்க மற்றும் மினுவாங்கொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற தங்கச் சங்கிலி திருட்டு மற்றும் பல சொத்து திருட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக்குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், வாள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை உருக்கித் தயாரிக்கப்பட்ட 9 தங்கக் கட்டிகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் குறித்து கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
