“ரூபாவிலிருந்து ரூபாவுக்கு: இந்திய இலங்கை வர்த்தக தொடர்புகளை வலுவாக்கல்” என்ற தலைப்பிலான வட்டமேசை மாநாடு ஒன்றை 2026 ஜூன் 15 ஆம் திகதி இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒழுங்குசெய்திருந்தது. இந்த நிகழ்வில் அரச நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவன அதிகாரிகள், தொழில்துறை தலைவர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், இரு நாடுகளதும் வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் கலந்துகொண்டு , உள்ளூர் நாணயங்களின் மேம்பட்ட பயன்பாட்டின் ஊடாக இந்தியா இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்களது வரவேற்புரையுடன் இந்த நிகழ்வு ஆரம்பமானது, அவர் தனது உரையில் இந்தியா இலங்கை இடையில் வளர்ந்துவரும் பொருளாதார பங்குடைமை தொடர்பாகவும், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் நிதி தொடர்புகள் குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிகழ்வின் சிறப்புரையானது இலங்கை மத்தியவங்கி ஆளுநர் கலாநிதி பி நந்தலால் வீரசிங்கே அவர்களால் நிகழ்த்தப்பட்டதுடன், அவர் தனது உரையில் INR-LKR பரிவர்த்தனைகளுக்கு ஆதரவளிக்கும் நிதிக் கட்டமைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட அண்மைய கொள்கை ரீதியான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை வலுப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இந்திய ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியவற்றால் வழங்கப்பட்ட விளக்கக்காட்சிகளின்போது, INR-LKR வர்த்தகத் தீர்வுகள் தொடர்பான செயற்பாட்டு அம்சங்கள், சாத்தியமான வங்கித் தீர்வுகள், மற்றும் இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள் மூலம் இந்திய ரூபாவில் கடன்களை வழங்குவதை அனுமதிக்கும் சமீபத்திய கொள்கை வழிகாட்டுதல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டடிருந்தது.
அத்துடன் Commercial Bank, Seylan Bank, Standard Chartered Bank, AMW, DHT Cement, Lanka Spin Pvt. Ltd, Nithya Paper மற்றும் Boards Lanka Pvt. Ltd, ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட இலங்கையின் வங்கித்துறை மற்றும் பெருநிறுவனங்களின் முன்னணி அதிகாரிகள் கலந்துகொண்ட குழுநிலை கலந்துரையாடல் ஒன்றும் இங்கு நடைபெற்றிருந்தது.
இதன்போது இப்பிரதிநிதிகள், வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பரிவர்த்தனைகளின்போது உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துதல் தொடர்பான நடைமுறை ரீதியானஅனுபவங்கள், நன்மைகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பகிர்ந்துகொண்டதுடன், இந்தியா – இலங்கை இடையிலான வர்த்தக வழித்தடத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான மார்க்கங்களையும் ஆராய்ந்தனர்.
இந்த வட்டமேசை மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், INR-LKR கொடுப்பனவு வழிமுறை தொடர்பாக வளர்ந்து வரும் அங்கீகாரம், எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளைச் சுமுகமாக்கல், பணப்புழக்க முகாமைத்துவத்தை மேம்படுத்தல், பரிவர்த்தனை ரீதியான செலவுகளைக் குறைத்தல், இருதரப்பு வர்த்தகத்தில் மீள்தன்மையை அதிகரித்தல் ஆகியவற்றுக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டன. மேலும் உள்ளூர் நாணயத் தீர்வுகளின் முழுமையான ஆற்றலை வெளிக்கொணர, தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வலுவான வங்கி இணைப்புகள் மற்றும் தனியார் துறையின் பரந்தளவான பங்கேற்பு ஆகியவற்றின் அவசியத்தையும் பங்கேற்பாளர்கள் இங்கு வலியுறுத்தினர்.
